திருவள்ளுவர் தமிழர்களுக்கு மட்டும் அல்லாது மனிதனாக வாழும் அனைவரும் போற்றி வணங்கும் கவிஞர் முதல்–மந்திரி சித்தராமையா புகழாரம்

திருவள்ளுவர் தமிழர்களுக்கு மட்டும் அல்லாது மனிதனாக வாழும் அனைவரும் போற்றி வணங்கும் கவிஞர் ஆவார் என்று சித்தராமையா புகழாரம் சூட்டியுள்ளார்.

Update: 2017-01-15 23:05 GMT

பெங்களூரு

திருவள்ளுவர் தமிழர்களுக்கு மட்டும் அல்லாது மனிதனாக வாழும் அனைவரும் போற்றி வணங்கும் கவிஞர் ஆவார் என்று முதல்–மந்திரி சித்தராமையா புகழாரம் சூட்டியுள்ளார்.

கர்நாடக மக்கள் சார்பில் கவுரவம்

பெங்களூருவில் நேற்று நடைபெற்ற திருவள்ளுவர் தினம் மற்றும் தமிழ் மொழி பேசும் கன்னடர்களின் தின விழாவில் முதல்–மந்திரி சித்தராமையா கலந்து கொண்டு திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் முதல்–மந்திரி சித்தராமையா நிருபர்களிடம் கூறியதாவது:–

திருவள்ளுவர் பிறந்த நாள் விழா ஆண்டு தோறும் பெங்களூருவில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் நான் கலந்து கொண்டு திருவள்ளுவருக்கு கவுரவம் செலுத்தி வருகிறேன். அதுபோல, இன்று திருவள்ளுவர் தினம் என்பதால் கன்னடர்கள் மற்றும் கர்நாடக மக்கள் சார்பில் திருவள்ளுவருக்கு கவுரவம் செலுத்தி உள்ளேன்.

போற்றி வணங்கும் கவிஞர்

கர்நாடத்தில் சர்வஞ்ஞர் வாழ்க்கை நெறிமுறைகளை போதித்தது போல, தமிழ்நாட்டில் திருவள்ளுவர் திருக்குறளை எழுதி வாழ்க்கை நெறி முறைகளை போதித்துள்ளார். தார்மீக நெறி, அறநெறி போன்ற கருத்துகளை சர்வஞ்ஞர் எழுதியது போல தமிழில் திருக்குறளை திருவள்ளுவர் எழுதி இருக்கிறார். அவரை தமிழ் சர்வஞ்ஞர் என்றே அழைக்கலாம். பெங்களூரு அல்சூர் ஏரிக்கரையில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையை அப்போது கர்நாடக முதல்–மந்திரியாக இருந்த எடியூரப்பா, தமிழக முதல்–மந்திரியாக இருந்த கருணாநிதி திறந்து வைத்தபோது நானும் கலந்து கொண்டேன்.

மனித வாழ்க்கைக்கு தேவையான அறநெறிகளை கற்பிக்கும் திருக்குறளை திருவள்ளுவர் எழுதி இருக்கிறார். அவர் தமிழகத்துக்கு மட்டும் அல்லாது மனிதனாக வாழும் அனைவரும் போற்றி வணங்கும் கவிஞர் ஆவார். மனித குலத்தை பண்படுத்தி, மேம்படுத்திக் கொள்ள திருக்குறள் பயன் உள்ளதாக இருக்கும்.

இவ்வாறு முதல்–மந்திரி சித்தராமையா கூறினார்.

மேலும் செய்திகள்