பெங்களூருவில் ரூ.20 கோடியில் ஓவிய பல்கலைக்கழகம் அமைக்கப்படும் முதல்–மந்திரி சித்தராமையா பேட்டி

பெங்களூருவில், ரூ.20 கோடியில் ஓவிய பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று முதல்–மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார்.

Update: 2017-01-15 23:03 GMT

பெங்களூரு,

ஓவிய சந்தை

பெங்களூரு குமர கிருபா ரோட்டில் ஆண்டு தோறும் சித்ரகலா பரி‌ஷத் சார்பில் ஓவிய சந்தை நடைபெறுவது வழக்கம். அதன்படி, 14–வது ஆண்டு ஓவிய சந்தை நேற்று தொடங்கியது. இந்த ஓவிய சந்தையை முதல்–மந்திரி சித்தராமையா நேற்று காலையில் தொடங்கி வைத்தார்.

இதில், மத்திய மந்திரி சதானந்த கவுடா, மந்திரி கே.ஜே.ஜார்ஜ், பெங்களூரு மாநகராட்சி மேயர் பத்மாவதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் முதல்–மந்திரி சித்தராமையா, மத்திய மந்திரி சதானந்த கவுடா உள்ளிட்டோர் ஓவிய சந்தையில் இடம் பெற்றிருந்த ஓவியங்களை ரசித்து பார்த்தார்கள். அதன்பிறகு, முதல்–மந்திரி சித்தராமையா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

ரூ.20 கோடியில் பல்கலைக்கழகம்

பெங்களூருவில் சித்ரகலா பரி‌ஷத் சார்பில் ஆண்டுதோறும் ஓவிய சந்தை நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு 16 மாநிலங்களை சேர்ந்த 1,300–க்கும் மேற்பட்ட ஓவிய கலைஞர்களின் படைப்புகள் இடம் பெற்றுள்ளன. வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் கலந்துகொண்டு உள்ளனர். கலைஞர்களின் படைப்புகளை நானும் பார்த்து ரசித்தேன். அந்த ஓவியங்களை எனது வீட்டில் வாங்கி வைக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. ஓவியங்கள் மீது எனக்கு எப்போதும் தனி பிரியம் உண்டு. ஓவிய சந்தையின் மூலம் ஓவிய கலைஞர்கள் தங்களது திறமையை வெளிக்காட்ட முடியும்.

பெங்களூருவில் ரூ.20 கோடியில் ஓவிய பல்கலைக்கழகம் அமைக்கப்படும். இங்கு உயர் மட்ட அளவில் ஓவிய கலைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். மேலும் ஓவிய கலைஞர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து கொடுக்கப்படும். இந்த சந்தையில் இடம் பெற்றுள்ள ஓவியங்களை மக்கள் விரும்பி வாங்கி செல்கிறார்கள். ஒரு சில ஓவியங்கள் பல லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் கலைஞர்களின் ஓவிய படைப்புகளுக்கு எந்த ஒரு விலையும் நிர்ணயிக்க முடியாது. ஒவ்வொரு ஓவியங்களும் விலை மதிப்பற்றது.

இவ்வாறு முதல்–மந்திரி சித்தராமையா கூறினார்.

3 லட்சத்து 20 ஆயிரம் பேர்

பெங்களூருவில் நேற்று நடந்த ஓவிய சந்தையில் கர்நாடகம் மட்டுமின்றி தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா போன்ற வெளி மாநிலங்களை சேர்ந்த ஓவிய கலைஞர்களும் கலந்துகொண்டனர். அவர்களின் கைவண்ணத்தில் உருவான அற்புதமான படைப்புகள் பொதுமக்கள் ரசிக்கும் வகையில் இருந்தது. அந்த ஓவியங்களை பொதுமக்கள் விரும்பி வாங்கிச் சென்றனர்.

நேற்று ஒருநாள் நடந்த ஓவிய சந்தையை 3 லட்சத்து 20 ஆயிரம் பேர் கண்டுகளித்ததாகவும், ரூ.2 கோடிக்கு மேலாக ஓவியங்கள் விற்பனையானதாகவும் சித்ரகலா பரி‌ஷத் தலைவர் பிரபாகர் கூறினார்.

மேலும் செய்திகள்