கடலில் மிதந்து வந்த வாலிபர் பிணம் யார் அவர்? போலீஸ் விசாரணை

கன்னியாகுமரி கடலில் வாலிபர் பிணம் மிதந்து வந்து கரை ஒதுங்கியது. மேலும் அவர் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2017-01-15 22:45 GMT
கன்னியாகுமரி,

கன்னியாகுமரி கடல்

உலக புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வந்து செல்கிறார்கள். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் கடலில் நீராடி மகிழ்வார்கள். கன்னியாகுமரி கடல் பகுதியில் பல ஆபத்தான இடங்களும் உள்ளன. அத்தகைய இடங்களில் அறிவிப்பு பலகை வைத்து சுற்றுலா பயணிகள் குளிக்க வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அத்துடன் போலீசார் ரோந்து சென்று சுற்றுலா பயணிகளின் நடவடிக்கையை கண்காணித்து வருகிறார்கள்.

இந்தநிலையில், கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் சகாயஜோஸ் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் கடற்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

வாலிபர் பிணம்

அப்போது, கடற்கரை சாலையில் காட்சி கோபுரம் அருகே கடலில் ஒரு ஆண் பிணம் மிதந்து வந்தது. அந்த பிணம் அலையால் அடித்து வரப்பட்டு கரை ஒதுங்கியது. உடனே, போலீசார் அந்த பிணத்தை கைப்பற்றினர்

பிணமாக மீட்கப்பட்டவருக்கு 30 வயது இருக்கும். கருப்பு நிற அரைக்கால் டவுசரும், பச்சை-நீலம் கலந்த முழுக்கை சட்டையும் அணிந்திருந்தார். மேல்தாடையில் ஒரு பல் உடைந்து காணப்பட்டது. அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக பிணம் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிணமாக மீட்கப்பட்டவர், தற்கொலை செய்து கொண்டாரா? இல்லை கடல் அலையில் சிக்கி உயிரிழந்தாரா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்