திருவாரூரில் விவசாயிகள் உண்ணாவிரதம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திருவாரூரில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-01-15 23:00 GMT
திருவாரூர்,

உண்ணாவிரதம்

காவிரி டெல்டா மாவட்டங்களில் கடும் வறட்சி காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் தமிழர் திருநாளான பெங்கல் விழாவை கொண்டாட முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் திருவாரூர் ரெயில் நிலையம் முன்பு தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமை தாங்கினார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

காவிரி டெல்டா மாவட்டங்களில் வறட்சி காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்து வருகின்றனர். இதுவரை 230-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்துள்ளனர். இதற்கு மத்திய அரசே பொறுப்பு ஏற்க வேண்டும். இதே நிலை தொடர்வதை அனுமதிக்க முடியாது. எனவே காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்காற்றுக்குழுவை மத்திய அரசு உடனே அமைக்க வேண்டும். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி செய்ய வேண்டும்.

வறட்சி பாதித்த மாநிலம்

தமிழக அரசு கோரும் நிதியினை உடன் விடுவிப்பதோடு, வறட்சி பாதித்த மாநிலமாக மத்திய அரசிதழில் வெளியிட வேண்டும். தமிழக அரசு உடன் பயிர்க்காப்பீடு இழப்பீட்டு தொகையின் அளவினை உறுதி செய்திட வேண்டும். உயிரிழந்த அனைவருக்கும் பாகுபாடின்றி நிவாரணம் வழங்கிட வேண்டும். விவசாய தொழிலாளர்களுக்கு குடும்ப அட்டைக்கு மாதம் தோறும் ரூ.5 ஆயிரம் வீதம் விவசாய பணி தொடங்கும் வரையில் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெறுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

உண்ணாவிரதத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். இறந்த விவசாயிகள் குடும்பத்திற்கு உரிய இழிப்பீடு வழங்க வேண்டும். பயிர்க்கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.

இதில் மாவட்ட தலைவர் சுப்பையன் (திருவாரூர்), பாலசுப்ரமணியன் (நாகை), பாஸ்கரன் (தஞ்சை), மாவட்ட செயலாளர் செந்தில்குமார் (திருவாரூர்), ராமதாஸ் (நாகை), அண்ணாதுரை (தஞ்சை), மாநில துணை செயலாளர் வரதராஜன், மாநில துை-ணைத்தலைவர் ஜெயராமன், மண்டல தலைவர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்