நெற்பயிர்களுக்கு டேங்கர் லாரி மூலம் தண்ணீர் பாய்ச்சும் விவசாயிகள்

பூதலூர் பகுதியில் நெற்பயிர்களுக்கு டேங்கர் லாரி மூலம் விவசாயிகள் தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர். இதனால் கூடுதல் செலவு ஏற்படுவதால் கவலை அடைந்துள்ளனர்.

Update: 2017-01-15 23:00 GMT
திருக்காட்டுப்பள்ளி,

காவிரி டெல்டா

காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு நெருக்கடியான சூழ்நிலையில் உள்ளனர். குறிப்பாக கல்லணையின் தலைப்பில் இருக்கும் தஞ்சை மாவட்டம் பூதலூர் ஒன்றிய பகுதியில் நடவு செய்யப்பட்ட பயிர்கள் தண்ணீர் இன்றி கருகி வருவதால், பயிரை காப்பாற்ற விவசாயிகள் பாடுப்பட்டு வருகின்றனர். தண்ணீர் கிடைக்கும் இடத்தில் இருந்து நீண்ட தூரம் குழாய்கள் வழியாக தண்ணீரை கொண்டு சென்று பயிர்களுக்கு பாய்ச்சி வருகின்றனர். இந்த நிலையில் பூதலூர் ஒன்றியம் மாரநேரி கிராமத்தில் அய்யனார் ஏரி பாசனபகுதி, ஆனந்தகாவிரி வாய்க்கால் பாசன பகுதி மற்றும் கல்லணை கால்வாய் பாசன பகுதிகளில் விவசாயிகள் ஆந்திரா பொன்னி ரக நெற்பயிரை நடவு செய்துள்ளனர். தற்போது களை எடுத்து கதிர் வந்து கொண்டுள்ளது. இன்னும் 15 அல்லது 20 நாட்களுக்கு தண்ணீர் கிடைத்தால் அறுவடை செய்து விட முடியும் என்ற நிலை உள்ளது. இந்த நிலையில் ஆனந்தகாவிரி வாய்க்கால் வறண்டு விட்டது. அய்யனார் ஏரியில் உள்ள தண்ணீரை விவசாயிகள் இரைத்து பயிர்களுக்கு பாய்ச்சியதால் அதிலும் தண்ணீர் இல்லை. வெண்ணாற்றில் மோட்டார் வைத்து தண்ணீரை இரைத்து விட்டதால் மணல் ஆறாக காட்சி அளித்து வருகிறது. கதிர் வந்த பயிர்களை காப்பாற்ற மாரநேரி கிராம விவசாயிகள் டேங்கர் லாரி மூலம் நெற்பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர்.

விவசாயிகள் கவலை

இதுகுறித்து அந்த பகுதி விவசாயிகள் கூறுகையில், மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் போதிய அளவு வராததாலும், பருவமழை பொய்த்து போனதாலும் காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மாரநேரி கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயிர்களுக்கு டேங்கர் லாரி மூலம் தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர். இதற்காக அருகில் உள்ள காவிரி கரையோர கிராமத்தில் இருந்து ஆழ்குழாய் கிணற்று தண்ணீரை டேங்கர் லாரியில் நிரப்பி கொண்டு வந்து வயலுக்கு பாய்ச்சி வருகின்றனர். ஒரு ஏக்கருக்கு ஒருமுறை டேங்கர் லாரி மூலம் தண்ணீர் பாய்ச்ச ரூ.15 ஆயிரம் செலவாகிறது. கூடுதல் செலவு ஏற்படுவதால் வாங்கிய கடனை எப்படி செலுத்துவது என்று கவலையில் உள்ளோம். கூடுதல் செலவுசெய்தாலும் நல்ல விளைச்சல் கிடைக்குமா என்று சந்தேகம் ஏற்பட்டது. தமிழக அரசு மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் இது போன்ற பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்தி விவசாயிகளின் கூடுதல் செலவுக்கு ஏற்ற வகையில் இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்