பாண்டுரங்கன்கோவிலில் 108 பசுக்களுக்கு சிறப்பு பூஜை

கோவிந்தபுரம் பாண்டுரங்கன்கோவிலில் 108 பசுக்களுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

Update: 2017-01-15 22:45 GMT
திருவிடைமருதூர்,

பசுக்களுக்கு சிறப்பு பூஜை

திருவிடைமருதூர் அருகே உள்ள கோவிந்தபுரத்தில் பாண்டுரங்கன் கோவில் உள்ளது. தட்சிண பண்டரிபுரமாக விளங்கும் இங்கு மதுரா, துவாரகை பகுதிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட கோவர்த்தன பசுக்கள் வளர்க்கப்படுகிறது.

இந்த பசுமாடுகளுக்கு என தனியாக மின்விசிறி உள்பட அனைத்து நவீன வசதிகளும் செய்யப்பட்டு, தூய்மையான சூழ்நிலையில் வளர்க்கப்படுகிறது. இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோசாலைக்கு சென்று பசுக்களை வலம் வந்து வழிபட்டு செல்கின்றனர்.

இந்த நிலையில் மாட்டுப் பொங்கலையொட்டி நேற்று காலை ருக்மணி சமேத பாண்டுரங்கனுக்கு சிறப்பு ஆராதனைகள் நடந்தது. பின்னர் 108 பசுக்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் 108 தம்பதிகள் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டு பசுக்களுக்கு மஞ்சள், குங்குமம் இட்டும் பூக்களாலும் சிறப்பு பூஜை செய்து தீபாராதனை காண்பித்தனர். மேலும், பசுக்களுக்கு பழங்கள் மற்றும் பொங்கல் அளித்து மகிழ்ந்தனர்.

அப்போது சேங்காலிபுரம் பிரம்மஸ்ரீ ராமதீட்சதர் கூறுகையில், பசுக்களை வழிபடுவதன் மூலம் அனைத்து விதமான தெய்வங்களையும், தேவர்களையும் வழிபட்ட பலன் கிடைக்கும். பசுவிற்கு செய்யப்படும் பூஜையை பார்ப்பவர்களுக்கும் அத்தகைய பலன் ஏற்படும். பசு வழிபாடு தேச அமைதிக்கு வழிவகுக்கும். ஒவ்வொரு வீட்டிலும் பசுவை தெய்வமாக கொண்டு வளர்த்து வழிபட வேண்டியது அவசியம். பசு உள்ள வீட்டில் அனைத்தும் ஐஸ்வர்யங்களும் இருக்கும் என்றார். இதற்காக ஏற்பாடுகளை கோவில் நிர்வாக பொறுப்பாளர்கள் பஞ்சாபிகேசன், கிருஷ்ணமூர்த்தி, மேலாளர் வெங்கடேசன் மற்றும் பணியார்கள் செய்திருந்தனர்.

பாபநாசம்

இதே போலபாபநாசம் திருப்பாலைத்துறை பாலைவனநாதர் கோவிலில் ஆன்மிக பேரவை சார்பில் கோ-பூஜை நடைபெற்றது. இதில் 27 பசுகளுக்கு பூஜை கும்பகோணம் ஜோதி மலை இறைபணி திருக்கூடத்தின் தலைவர் திருவடிக்குடில் சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றது.

நந்திக்கு சிறப்பு சந்தனகாப்பும், சாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. பசுகளுக்கு மாலையிட்டு பச்சரிசி, அருகம்புல், அகத்திக்கீரை பக்தர்கள் மூலம் கொடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் சிவசங்கரி, தக்கார் பூமா, பானுமதி துரைக்கண்ணு, தனபால், சம்பத் உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஆன்மிக பேரவை அமைப்பாளர்கள் சீனி வாசன், சாந்தி, சுவாமிநாதன் ஆகியோர் செய்திருந்தனர். அனைவருக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்