மாமல்லபுரம் கடலில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

காணும் பொங்கலை முன்னிட்டு மாமல்லபுரம் கடலில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2017-01-15 22:45 GMT
மாமல்லபுரம்,

கடலில் குளிக்க தடை

காணும் பொங்கலை முன்னிட்டு இன்று (திங்கட்கிழமை) மாமல்லபுரத்தில் லட்சக்கணக்கில் சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்பதால் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி குளிப்பவர்களை தடுக்கும் வகையில் மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு எட்வர்ட் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி உள்பட 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

கூட்டத்தில் காணாமல் போகும் சிறுவர், சிறுமிகள், முதியவர்களை கண்டுபிடித்து அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்க ஒலிபெருக்கி வைக்கப்பட்டுள்ளது. இதில் திருடர்களிடம் இருந்து பொதுமக்கள் உஷாராக இருக்கவேண்டும் என்று எச்சரிக்கை வாசகம் ஒலித்து கொண்டே இருக்கும்.

கண்காணிப்பு கோபுரம்

கடற்கரையில் கண்காணிப்பு கோபுரமும் அமைக்கப்பட்டுள்ளது. அதில் இருந்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவர். ஆம்புலன்ஸ் தயார்நிலையில் வைக்க ஏற் பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சந்தேக நபர்களின் நடமாட்டம் இருந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்றும், ஆபத்தான கடல் பகுதி என்பதால் யாரும் கடலில் குளிக்க வேண்டாம் என்றும் மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி சுற்றுலா பயணிகளுக்கு வேண்டுகோள் விடுத்து அறிவுறுத்தி உள்ளார்.

மேலும் சுற்றுலா பயணிகள் யாரும் கடலில் குளிக்காத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடற்கரை பகுதி முழுவதும் 500 மீட்டர் தூரத்திற்கு சவுக்கு கம்புகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்