தாலுகா அலுவலகத்தில் பொங்கல் வைக்கும் போராட்டம்

தாலுகா அலுவலகத்தில் பொங்கல் வைக்கும் போராட்டம்

Update: 2017-01-15 23:15 GMT
பொள்ளாச்சி

நிகழ்ச்சி நடத்த தடை

பொள்ளாச்சி அருகே உள்ள காளியப்பகவுண்டன்புதூரை சேர்ந்தவர் நாகராசன். இவர் பெரியார் திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த காளஸ்வரன் என்பவருக்கும் இடையே நிலம் தொடர்பாக பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் காளஸ்வரன் தனது உறவினர்களுடன் சேர்ந்து, நாகராசனை தாக்கி வீட்டில் இருந்த பொருட்களை சேதப்படுத்தியதாக ஆனைமலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து பெரியார் திராவிடர் கழக நிர்வாகிகள் சப்-கலெக்டர், எம்.எல்.ஏ. அலுவலகத்தில் மனு கொடுத்தனர். இதேபோன்று எதிர்தரப்பினரும் மனு கொடுத்தனர். இதனால் காளியப்பகவுண்டனூரில் பதற்றமான சூழ்நிலை நிலவியது. இதனால் பொங்கல் பண்டிகையின் போது இரு தரப்பினர் இடையே பிரச்சினை ஏற்படும் நிலை உருவானது. இதைத்தொடர்ந்து பொள்ளாச்சி தாலுகா அலுவலகத்தில் நடந்த அமைதி பேச்சுவார்த்தையில், இருதரப்பினரும் பொங்கல் பண்டிகையையொட்டி நிகழ்ச்சி நடத்த தடை விதிக்கப்பட்டது.

121 பேர் கைது

இதை கண்டித்து பெரியார் திராவிடர் கழகம் சார்பில் பொள்ளாச்சி தாலுகா அலுவலகத்தில் பொங்கல் வைக்கும் போராட்டம் நடத்தப்படும் அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று பொள்ளாச்சி காந்தி சிலை சிக்னலில் இருந்து பொங்கல் பானை, கரும்பு போன்றவற்றுடன் தாலுகா அலுவலகத்திற்கு பெரியார் திராவிடர் கழகத்தினர் செல்ல முயன்றனர். அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். இதையடுத்து அவர்கள் காந்தி சிலை சிக்னல் அருகே போலீசாரை கண்டித்து கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் தடையை மீறி தாலுகா அலுவலகத்தில் பொங்கல் வைக்க முயன்றதாக 48 பெண்கள் உள்பட பெரியார் திராவிடர் கழகத்தினர் 121 பேரை போலீசார் கைது செய்தனர்.

மிகப்பெரிய போராட்டம்

இதுகுறித்து பெரியார் திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர் நாகராசன் கூறியதாவது:-

காளியப்பகவுண்டனூரில் கடந்த 17 ஆண்டுகளாக தமிழ் இலக்கிய மன்றம் சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி புத்தக, அறிவியல் கண்காட்சி மற்றும் பாரம் பரிய விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு தடை விதித்தது வன்மையாக கண்டிக்கதக்கது. அடுத்த ஆண்டு பொங்கல் விழா நடத்த போலீசார் அனுமதி மறுத்தால், மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்