புதிய தொழில் முனைவோர் தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்

புதிய தொழில் முனைவோர் தொழில் மேம்பாட்டுத்திட்டத்தின் மூலம் பயன்பெற்று தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம்;

Update: 2017-01-15 22:00 GMT

 

விருதுநகர்,

தொழில்

தமிழ்நாட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மேம்படவும், புதிய தொழில் நிறுவனங்கள் முதல் தலைமுறை தொழில் முனைவோர் மூலம் ஏற்படவும், பட்டம் மற்றும் பட்டயப் படிப்பு படித்த முதல் தலைமுறையினர் சுயமாக தொழில் துவங்கிடவும், புதிய தொழில் முனைவோர் – தொழில் மேம்பாட்டுத்திட்டத்தினை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. புதிய தொழில் முனைவோர் – தொழில் மேம்பாட்டுத்திட்டத்தின் மூலம் பயன்பெற, பொது பிரிவு ஆண்களுக்கு 21 வயது முதல் 35 வயது வரையும், மற்ற பிரிவினருக்கு 21 வயது முதல் 45 வயது வரையும் இருத்தல் வேண்டும், புதிய தொழில் முனைவோர் பட்டபடிப்பு, பட்டயபடிப்பு, ஐடிஐ மற்றும் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் தொழில் கல்வி கற்றிருக்க வேண்டும், குறைந்த பட்சம் 3 வருடத்திற்கு குறையாமல் தமிழகத்தில் குடியிருப்பவராக இருத்தல் வேண்டும். ஆண்டு வருமானம் வரைமுறை இல்லை. நிறுவனர் வேறு ஏதும் அரசு திட்டத்தில் மானியத்துடன் கூடிய கடன் பெற்று இருந்தால் இத்திட்டத்தில் பயன் பெற இயலாது மேற்குறிப்பிட்ட தகுதிகளுடன் மாவட்ட தொழில் மையத்தினை தொடர்பு கொண்டால், அனைத்து உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில்களுக்கு குறைந்தபட்சம் 5 லட்சம் முதல் 1 கோடி வரை (இடம், கட்டிடம் மற்றும் இயந்திரங்களின் மொத்த மதிப்பு) திட்ட மதிப்பீட்டில், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம், அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் கடன் வழங்கும் நிறுவனங்கள் மூலம் கடன் தொகை வழங்கப்படும். கடன் தொகை மானியமாக, திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் (அதிகபட்சம் ரூ.25 லட்சம் வரை) வழங்கப்படும். முறையாக கடனை திருப்பிச் செலுத்தும் பட்சத்தில் பின்முனை வட்டி மானியமாக 3 சதவீதம் வழங்கப்படும். மேலும், கடன் தொகை பெற புதிய தொழில் முனைவோர், ஒரு மாத கால தொழில் முனைவோர் பயிற்சி கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். புதிய தொழில் முனைவோர் அதிக அளவு தொழில் தொடங்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். அதன் அடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட தொழில் மையம் மூலம் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் 2012 முதல் 2016 வரை 44 நபர்களுக்கு ரூ. 373 லட்சம் மானியத்தில் கடன் வழங்கப்பட்டுள்ளது. எனவே, புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் புதிய தொழில் தொடங்க மேற்கண்ட தகுதியுடைய தொழில் முனைவோர் மாவட்ட தொழில் மையத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு கலெக்டர் சிவஞானம் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்