விக்கிரவாண்டி அருகே ஆட்டோ மீது தனியார் பஸ் மோதல்; 2 பேர் பலி
விக்கிரவாண்டி அருகே ஆட்டோ மீது தனியார் பஸ் மோதல்;
விக்கிரவாண்டி,
விக்கிரவாண்டி அருகே பாப்பனம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர்கள் ராஜாராமன்(வயது 59), காசிநாதன்(49) மற்றும் ஆர்.சி.மேலச்சந்தையை சேர்ந்தவர் தனபால் மனைவி சகுந்தலா(65). இவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் காலை ஒரு ஆட்டோவில் பாப்பனம்பட்டில் இருந்து திருக்கனூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். ஆட்டோவை பாப்பனம்பட்டை சேர்ந்த வேலுமணி(33) ஓட்டிச் சென்றார். விக்கிரவாண்டி அடுத்த பனையபுரம் சோதனைச்சாவடி அருகே சென்றபோது, புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கி எதிரே வந்த தனியார் பஸ் ஒன்று, ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோ அப்பளம்போல் நொறுங்கியது.
பெண் உள்பட 2 பேர் பலிஇந்த விபத்தில் ஆட்டோ இடிபாட்டில் சிக்கி ராஜாராமன் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த சகுந்தலா உள்ளிட்ட 3 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சகுந்தலா பரிதாபமாக உயிரிழந்தார். காசிநாதன், வேலுமணி ஆகியோருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதற்கிடையே விபத்து பற்றி தகவல் அறிந்த விக்கிரவாண்டி போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, விபத்தில் பலியான ராஜாராமன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.