சேலத்தில் கல்லூரி மாணவரின் உடல் கிணற்றில் மீட்பு கொலையா?
சேலத்தில் கல்லூரி மாணவரின் உடல் கிணற்றில் மீட்கப்பட்டது.
சேலம்,
சேலம் மாசிநாயக்கன்பட்டி டீச்சர்ஸ் காலனி பகுதியை சேர்ந்தவர் அய்யாசாமி. இவர் பொதுப்பணித்துறையில் நிர்வாக அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவருடைய மகன் நிவாஷ்(வயது 24). அவர் சேலம் செரி ரோட்டில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பி.ஏ. ஆங்கிலம் படித்து வந்தார்.
இந்தநிலையில் கடந்த 13–ந் தேதி காலை திடீரென நிவாஷ் மாயமானார். அவர் கல்லூரிக்கு சென்றிருக்கலாம் என்று நினைத்து வீட்டில் இருந்தவர்கள் அவரை தேடவில்லை. ஆனால் நிவாஷ் இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் நிவாசை பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
பிணமாக மீட்புஇந்தநிலையில் வீடு அருகே உள்ள ஊர் பொதுக்கிணற்றில் நேற்று மதியம் நிவாஷ் பிணமாக மிதந்தார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் நிவாசின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அங்கு திரண்டு வந்து அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். மேலும் சம்பவ இடத்துக்கு சேலம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கிணற்றுக்குள் மிதந்த கல்லூரி மாணவரின் உடலை மீட்டனர்.
இதனிடையே அங்கு அம்மாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து நிவாசின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.