விமானத்தில் இருந்து விழுந்து பிழைத்த பெண்!

விமானத்தில் இருந்து விழுந்து பிழைத்த பெண்!

Update: 2017-01-14 03:42 GMT
டுவானில் வெடித்துச் சிதறிய விமானத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. உயரத்தில் இருந்து விழுந்து உயிர் பிழைத்த பெண், 40 ஆண்டுகளுக்குப் பின் சமீபத்தில் இறந்தார்.

செர்பியா நாட்டைச் சேர்ந்த வெஸ்னா வுலோவிக் என்ற அவர், சம்பவம் நடந்த 1972-ம் ஆண்டில் 23 வயது இளம்பெண்ணாக இருந்தார். ஜாட் பிளைட் 367 என்ற விமானத்தில் பணிப்பெண் ணாகப் பணிபுரிந்து வந்தார்.

அந்த ஆண்டு ஜனவரி 26-ம் தேதி சுவீடன் தலைநகரான ஸ்டாக்ஹோம் நகரில் இருந்து செர்பியா தலைநகரான பெல்கிரேடுக்கு குறிப்பிட்ட விமானம் 28 நபர்களுடன் பயணமானது.

விமானம் நடுவானில் பறந்துகொண்டு இருந்தபோது திடீரென கோளாறு ஏற்பட்டு வெடித்துச் சிதறியது. பணிப்பெண் உள்பட விமானத்தில் பயணித்த 27 பேரும் விமானத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டனர்.

சுமார் 10 ஆயிரம் மீட்டர் (10 கி.மீ.) உயரத்தில் இருந்து விழுந்த அனைவரும் உடல்கள் சிதைந்து பலியாயினர். ஆனால், வெஸ்னா மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.

விமானப் பாகங்கள் கிடந்த இடத்தில் மீட்புப் பணிகளை மேற்கொண்ட மீட்புக்குழுவினர், பணிப்பெண் மட்டும் உயிருடன் இருப்பதை பார்த்து வியப்புடன் அவரை காப்பாற்றினர்.

ஆனால் அவரின் இரு கால்களும் உடைந்திருந்தன. தலையில் பலமாக காயம் ஏற்பட்டிருந்ததால் தொடர்ந்து 27 நாட்கள் கோமாவில் இருந்தார்.

பின்னர், சுயநினைவு திரும்பியபிறகும் சுமார் 16 மாதங்கள் சிகிச்சை பெற வேண்டிய நிலை.

உலக வரலாற்றில் சுமார் 10 கி.மீ. உயரத்தில் இருந்து இதுவரை யாரும் பாராசூட் இல்லாமல் குதித்தது இல்லை என்பதால் வெஸ்னாவின் பெயர் கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்றது.

66 வயதை எட்டிய அவர், செர்பியாவில் உள்ள ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்தார். சமீபத்தில் அவரை அவரது சகோதரர் போனில் தொடர்புகொண்டார். ஆனால், அவரிடம் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த சகோதரர், வெஸ்னாவின் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது அவர் இறந்து கிடந்தார்.

விமானத்தில் இருந்து விழுந்தும் பிழைத்த பெண், 40 ஆண்டுகளுக்குப் பிறகு இயற்கையாக மரணம் அடைந்திருக்கிறார்.

மேலும் செய்திகள்