சேவல்களுக்கு பாதாம்.. பிஸ்தா.. மசாஜ்

மன்னர் காலத்தில் காடை சண்டை, கவுதாரி சண்டை மற்றும் சேவல் சண்டை

Update: 2017-01-14 02:53 GMT
ன்னர் காலத்தில் காடை சண்டை, கவுதாரி சண்டை மற்றும் சேவல் சண்டை போன்றவை பிரபலம். அதில் முதல் கலையாகவும் வீரச்சண்டையாகவும் கருதப்பட்டது சேவல் சண்டையாகும். காரணம் சண்டையிடும் சேவல் ஒருபோதும் பயந்து ஓடாது. தன் உயிர் போகும் கடைசி நிமிடம் வரை சண்டையிடும். இது தன் எஜமானருக்கு விசுவாசத்தை காட்டக்கூடியது. புதுக்கோட்டை நடுமன்னரான ராதாகிருஷ்ண தொண்டைமான் நினைவாக நான் 50 சண்டை சேவல்களை வளர்த்து வருகிறேன். ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் பொங்கலை ஒட்டி புதுக்கோட்டையில் நடைபெறும் போட்டியில் பங்கு கொள்வேன்.

இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திராவில் இருந்து சுமார் 2 ஆயிரம் சேவல்கள் கலந்து கொள்ளும். இந்த போட்டியை காண சுமார் 10 ஆயிரம் பேர் வருவார்கள். முன்பு சேவலின் காலில் சிறிய கத்தியை கட்டி சண்டைக்கு (கத்தி கட்டு) விடுவார்கள். இந்த சண்டையில் கத்தியில் வெட்டுபட்டு கோழி இறந்து விடும். இதனால் சண்டை 1 அல்லது 2 நிமிடம் மட்டுமே நடைபெறும்.

இந்த சண்டை தற்போது தடைசெய்யப்பட்டுள்ளது. எனவே தற்போது கத்தியின்றி வெற்றுக்கால் சண்டை மட்டுமே நடைபெற்று வருகிறது. இந்த சண்டை கால் மணிநேர இடைவெளியில் 4 சுற்றுகள் வீதம் ஒரு மணிநேரம் நடைபெறும். விரைவில் வெற்றி பெற்ற சேவல்கள் சில நேரங் களில் இரண்டு அல்லது மூன்று முறை கூட சண்டைகளில் கலந்துகொள்ளும்.

சேவல்களின் உயரத்தை வைத்து பிரித்து சண்டை நடைபெறும். சேவலில் ஜாவா, யாக்கூத், நூரி, ககர், தும்மர், சீத்தா போன்று பல ரகங்கள் உள்ளன. இவை சுமார் 3.5 கிலோவில் இருந்து 5 கிலோ வரை இருக்கும். வெற்றி பெற்ற சேவலின் உரிமையாளருக்கு பரிசுகள் வழங்கப்படும். இந்த சேவல் சண்டையில் சூது கிடையாது, பந்தயம் கிடையாது. இந்த சண்டை கால்நடை துறை அதிகாரிகள் சேவலை பரிசோதித்த பின்பு தான் நடைபெறும்” என்றார்.

பயிற்சியாளர் சொக்கலிங்கம் கூறுகிறார்:

“சேவல் சண்டை நடைபெறுவதற்கு 21 நாட்களுக்கு முன்பே அதற்காக தயாரிக்கப்பட்ட விசேஷ உணவுகள் சேவல்களுக்கு வழங்கப்படும். அதில் பாதாம், பிஸ்தா, திராட்சை, அக்ரூட், சாரப்பருப்பு, பேரீச்சை, கஸ்தூரி போன்றவற்றை அரைத்து உருண்டையாக உருட்டி சுமார் 50 கிராம் அளவிற்கு காலை மாலை இரண்டு வேளை ஊட்டிவிடுவோம்.

மேலும் மஞ்சள் கரு நீக்கிய பச்சை முட்டை ஒன்றும் அவித்த முட்டைகள் இரண்டும் தினமும் கொடுப்போம். இதை தவிர காலை மாலை இரண்டு வேளை நடைப்பயிற்சி மற்றும் நீச்சல் பயிற்சி அளிக்கப்படும். மேலும் ‘மசாஜ்’ செய்தும் கோழிகளை பலப்படுத்துவோம். சேவலின் கால், ரெக்கை, கழுத்து, உடம்பு போன்றவற்றை பிடித்து மசாஜ் செய்யப்படும். சண்டை நடைபெறும் போது முதல் கால்மணிநேரம் முடிந்த பின்பு சேவலுக்கு வலித்தெரியாமல் இருக்க நனைத்த துணி கொண்டு இளஞ்சூட்டில் ஒத்தடம் கொடுப்போம். சண்டை முடிந்தபின்பு மஞ்சள், புளி போன்றவை கலந்து ஒத்தடம் கொடுக்கிறோம். இதனால் காயம் விரைவில் ஆறுவதுடன் தொற்றுநோய் வராமலும் தடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு, சேவல் சண்டை போன்றவற்றிற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை நீக்க வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சிகளும் சமூக ஆர்வலர்களும் விரும்புகின்றனர்.

- சித்தார்த்தா, புதுக்கோட்டை.

மேலும் செய்திகள்