"தடையை மீறி ஜல்லிக்கட்டு நடக்கும்" மதுரை ஆர்ப்பாட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் பேச்சு

தடையை மீறி ஜல்லிக்கட்டு நடக்கும் என மதுரை ஆர்ப்பாட்டத்தில் கருணாஸ் உள்ளிட்ட 3 எம்.எல்.ஏ.க்கள் உறுதி அளித்துள்ளனர்.

Update: 2017-01-13 23:56 GMT

மதுரை,

கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி வழங்க கோரி முக்குலத்தோர் புலிப்படை, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை, மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் மதுரை பழங்காநத்தத்தில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் எம்.எல்.ஏ.க்கள் கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினர். மேலும் பீட்டா அமைப்பு, மத்திய அரசை கண்டித்து பல்வேறு கோ‌ஷங்கள் எழுப்பினர்.

இதனை தொடர்ந்து, தமிமுன் அன்சாரி பேசியவதாவது:–

ஜல்லிக்கட்டு என்பது காளைகளை கொடுமைப்படும் நிகழ்வு கிடையாது. அது காளைகளை கவுரவப்படுத்தும் ஒரு நிகழ்ச்சியாகும். ஆனால் அந்த நிகழ்ச்சிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இது தமிழர்களின் பாரம்பரியத்தை அழிக்க நினைக்கும் செயலாகும். யானை, ஒட்டகம் போன்றவற்றை வைத்து பந்தையம் நடத்துவது பீட்டா அமைப்பினருக்கு தெரியாமல் இருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது.

இந்திய ராணுவ படையில் கூட குதிரைப்படை உள்ளது. அவற்றை எல்லாம் பீட்டா அமைப்பினர் அறியாமல் இருக்கின்றனர். பீட்டா அமைப்பினர் கூலிக்கூட்டம் போல் செயல்படுகின்றனர். ஜல்லிக்கட்டுக்கு தடை விதிப்பதன் மூலம் அதன் பின்னணியில் அவர்களுக்கு பெரிய லாபம் கிடைக்கிறது.

விரட்ட வேண்டும்

உச்சநீதிமன்றத்தில் தகுதி உள்ளவர்கள் பதவியில் இருந்திருந்தால் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்திருக்க முடியாது. ஆனால் தகுதியில்லாதவர்கள் அங்கு பதவியில் இருப்பதால் ஜல்லிக்கட்டின் அருமை அவர்களுக்கு தெரியாமல் இருக்கிறது.

மத்தியில் ஆளும் பா.ஜ.க. நினைத்தால் அவசர சட்டம் கொண்டு வந்து ஜல்லிக்கட்டை நடத்தலாம். ஆனால் அவர்கள் அதற்கான எந்த நடவடிக்கைகளையும் எடுக்காமல் இருக்கின்றனர். இந்த வருடம் தடையை மீறியாவது ஜல்லிக்கட்டு நடக்கும்.

தமிழர்களின் இனத்தோடு மோதி கொண்டிருக்கும் பா.ஜ.க. அரசை தமிழகத்தில் இருந்து விரட்ட வேண்டும். மூத்த தலைவர்கள் இல.கணேசன், சுப்பிரமணியசாமி உள்ளிடோர் வன்முறையை தூண்டும் வகையில் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அவர்களின் கருத்துகளை மத்திய அரசு வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது.

தி.மு.க. தான் காரணம்

ஆர்ப்பாட்டத்தில் கருணாஸ் பேசியதாவது:–

தமிழர்களின் கலாசாரம் பாரம்பரியமிக்கது. மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. அப்போது காங்கிரஸ் கட்சியுடன் தி.மு.க. கூட்டணி வைத்திருந்தது. ஆனால் தற்போது மு.க. ஸ்டாலின் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க கோரி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்.

தமிழர்களின் உரிமையை விட்டு கொடுத்துவிட்டு தற்போது ஆர்ப்பாட்டம் நடத்துவது வேடிக்கையாக உள்ளது. குத்துச்சண்டை, குதிரை பந்தயம் போன்றவற்றுக்கு தடை விதிக்கப்படவில்லை. ஆனால் ஜல்லிக்கட்டுக்கு மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டை நடத்த மத்திய, மாநில அரசுகள் அவசர சட்டத்தை இயற்ற வேண்டும். அவ்வாறு செய்யாமல் இருந்தால் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விரட்டியடிக்க வேண்டும்

இதனை தொடர்ந்து தனியரசு பேசும்போது, தமிழர்களின் உணர்வோடும், உயிரோடும் கலந்த ஜல்லிக்கட்டு போட்டியை யாராலும் தடுத்து விட முடியாது. தமிழர்களின் எல்லா உரிமைகளையும் மத்திய அரசு பறித்து விட்டது. மலையாளம், கன்னடம் பேசுபவர்களுக்கு மட்டுமே மோடி அரசு உதவி செய்கிறது. தமிழர்களின் எந்த பிரச்சினைக்கும் மத்திய அரசு குரல் கொடுக்கவில்லை. மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், ஜல்லிக்கட்டு நடக்கும், நடக்கும் என்று கூறு மக்களை முட்டாளாக்கப்பார்க்கிறார். தமிழகத்திற்கு மோடி வந்தால் அவரை விரட்டியடிக்க வேண்டும். ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் கொண்டு வர வேண்டும். இல்லாவிட்டால் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முடிவில் தமிழ்நாடு பார்வர்டு பிளாக் பொதுச் செயலாளர் கணேசன் நன்றி கூறினார்.


மேலும் செய்திகள்