வைக்கோல் லாரி மீது ரெயில் மோதி விபத்து

புதுக்கோட்டை அருகே வைக்கோல் லாரி மீது மோதிய ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் 3 மணி நேரம் தாமதம்

Update: 2017-01-13 21:30 GMT

நார்த்தாமலை,

புதுக்கோட்டை அருகே வைக்கோல் லாரி மீது மோதிய ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் 3 மணி நேரம் தாமதத்திற்கு பின் புறப்பட்டு சென்றது. இதனால் அந்த ரெயிலில் பயணம் செய்த பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

வைக்கோல் லாரி மீது மோதல்

ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் மாலை சென்னைக்கு ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்16102) புறப்பட்டு வந்தது. இந்த எக்ஸ்பிரஸ் ரெயில் இரவு 8.15 மணிக்கு புதுக்கோட்டை ரெயில் நிலையம் வந்தது. அங்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு திருச்சி வழியாக சென்னை புறப்பட்டு சென்று கொண்டிருந்தது.

புதுக்கோட்டை அருகே உள்ள வடசேரிப்பட்டி பகுதியில் வந்தபோது, ஆள் இல்லா ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற வைக்கோல் லாரி மீது எக்ஸ்பிரஸ் ரெயில் பயங்கரமாக மோதியது. இதில் லாரி சேதமடைந்தது. மேலும் லாரியை ரெயில் சிறிது தூரம் இழுத்து சென்றது. இந்த விபத்தில் லாரி டிரைவர் லேசான காயத்துடன், லாரியில் இருந்து குதித்து தப்பியோடிவிட்டார். ரெயில் என்ஜினில் லாரி சிக்கிக்கொண்டதால் ரெயிலை தொடர்ந்து இயக்க முடியாத நிலை ஏற்பட்டது.

பயணிகள் அவதி

இதனால் ரெயிலில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் ரெயிலை விட்டு கீழே இறங்கி வந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் திருச்சியில் இருந்து ரெயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகுரு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பொக்ளின் எந்திரத்தின் உதவியுடன் ரெயில் என்ஜினில் சிக்கிக்கொண்ட லாரியை அகற்றினார்கள்.

இதைத்தொடர்ந்து ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் சுமார் 3 மணி நேரம் தாமதமாக வடசேரிப்பட்டியில் இருந்து புறப்பட்டு திருச்சியை நோக்கி சென்றது. இதனால் ரெயிலில் பயணம் செய்த பயணிகள் கடும் அவதி அடைந்தனர். இதற்கிடையில் சென்னையில் இருந்து காரைக்குடிக்கு இயக்கப்படும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இயக்கப்பட்டது.

மேலும் செய்திகள்