வாக்காளர் தினம் கொண்டாடுவது தொடர்பாக அரசு அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம்

வாக்காளர் தினம் கொண்டாடுவது தொடர்பாக அரசு அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம்

Update: 2017-01-13 22:15 GMT
ஆலோசனை கூட்டம்

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தேசிய வாக்காளர் தினம் கொண்டாடுவது தொடர்பாக அரசு அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;–

இந்திய தேர்தல் ஆணையம் 7–வது தேசிய வாக்காளர் தினத்தினை வருகிற 25–ந் தேதி கொண்டாட அறிவுறுத்தி உள்ளது. இதையொட்டி மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அரசு அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. இதில் இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டு உள்ள 7–வது தேசிய வாக்காளர் தின கருத்தான, இளைஞர்கள் மற்றும் எதிர்கால வாக்காளர்களுக்கு அதிகாரம் அளித்தல் என்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள், பதாகைகளை பஸ் நிலையம், ரெயில் நிலையம், பொதுமக்கள் கூடும் இடம் ஆகிய பல்வேறு இடங்களில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் வைக்க வேண்டும்.

அடையாள அட்டைகள்

மாவட்ட தலைநகரில் தேசிய வாக்காளர் தின விழா ஊராட்சி அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், சமுதாய குழுக்கள், நாட்டு நலப்பணி திட்டம், தேசிய மாணவர் படை ஆகிய பல்வேறு அமைப்புகளின் ஒத்துழைப்புடன் நடத்துவதுடன் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் புதிய வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்ட வாக்காளர்களுக்கு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகள் வழங்க வேண்டும். மேலும் புதுக்கோட்டையில் நடைபெறும் தேசிய வாக்காளர் தின ஊர்வலத்தை சிறப்பாக நடத்தும் வகையில் வருவாய்த்துறை, மகளிர் திட்டம், கல்வித்துறை, விளையாட்டுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் தங்களுக்கு தொடர்பான பணிகளை ஒருங்கிணைந்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சாந்தி, தாசில்தார்(தேர்தல்) தவச்செல்வம், அனைத்து தாசில்தார் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தே.தி.மு.க. சார்பில் பொங்கல் விழா

புதுக்கோட்டை மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் நேற்று புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் ராமசாமி தலைமை தாங்கினார். நகர செயலாளர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். இதில் கட்சி அலுவலகத்தின் முன்பு மகளிர் அணியினர் கரும்பு கட்டி, மண்பானையில் பொங்கல் வைத்தனர். தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் மாவட்ட பொருளாளர் கதிரவன், செய்தி தொடர்பாளர் ரவி உள்பட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டையில் தண்டாயுதபாணி கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் திரளான பக்தர்கள் தரிசனம்

புதுக்கோட்டையில் உள்ள தண்டாயுதபாணி கோவிலில் திருப்பள்ளி எழுச்சி நிறைவு நாள் விழாவையொட்டி நேற்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருப்பள்ளி எழுச்சி நிறைவு நாள் விழா

புதுக்கோட்டை அரசு மருத்துவமனை அருகே தண்டாயுதபாணி கோவில் உள்ளது. இந்த கோவிலில் மார்கழி மாதம் முதல் நாளில் இருந்து தினமும் அதிகாலை தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து சந்தனக்காப்பு செய்யப்பட்டு, மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்து வந்தார். இந்த நிலையில் நேற்று திருப்பள்ளி எழுச்சி நிறைவு நாள் விழா நடைபெற்றது.

இதையொட்டி சுவாமிக்கு பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம் உள்பட பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. பின்னர் சந்தனக்காப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து கோவிலில் உள்ள விநாயகர், தட்சிணாமூர்த்தி, பைரவர், நவக்கிரகங்கள், காசி விசுவநாதர், விசாலாட்சி, பின்புறம் உள்ள காமாட்சி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து விநாயகருக்கு வெள்ளி காப்பு சாத்தப்பட்டது.

சாந்தநாதசுவாமி கோவில்

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

இதேபோல் புதுக்கோட்டை சாந்தநாத சுவாமி கோவிலில் மார்கழி மாத திருப்பள்ளி எழுச்சி நிறைவு விழாவையொட்டி வேதநாயகி அம்மன், சாந்தநாத சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து சந்தனகாப்பு மலர் அலங்காரத்தில் சுவாமி– அம்பாள் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பாரதீய ஜனதா கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம்

புதுக்கோட்டை நகர பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் விவேகானந்தரின் பிறந்த நாளையொட்டி உறுப்பினர் சேர்க்கை முகாம் தொடக்க நிகழ்ச்சி புதுக்கோட்டையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகர தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். நகர பொது செயலாளர் லெட்சுமணன் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட தலைவர் ராம.சேதுபதி, மாநில செயலாளர் புரட்சி கவிதாசன், மாவட்ட பொது செயலாளர்கள் ரெங்கசாமி, சிவசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் புதியதாக சேர்ந்த உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்