பெரம்பலூரில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க கோரி இளைஞர்கள் ஊர்வலம்

பெரம்பலூரில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க கோரி இளைஞர்கள் ஊர்வலமாக சென்றனர்.

Update: 2017-01-13 22:30 GMT
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி...

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா அன்னமங்கலம், பூலாம்பாடி கடம்பூர், கள்ளப்பட்டி பகுதிகளில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி, மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டு வந்தது.

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்துவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளதால் கடந்த சில ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்துவது தடைபட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டை அனுமதிக்க வலியுறுத்தி பெரம்பலூரில் ஊர்வலம் நடத்த வருமாறு இளைஞர்களுக்கு “வாட்ஸ் அப்” மற்றும் முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் வாயிலாக சமூக ஆர்வலர்கள் பலர் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

ஊர்வலம்

இதனை ஏற்று பெரம்பலூரில் இளைஞர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று காலை திரண்டனர். ஜல்லிக்கட்டு நடத்திட மத்திய அரசு உரிய அனுமதி வழங்க கோரியும், ஜல்லிக்கட்டுக்கு எதிராக இயங்கி வரும் பீட்டா அமைப்பை கண்டித்தும் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு பாலக்கரை, வெங்கடேசபுரம், சங்குப்பேட்டை, கடைவீதி வழியாக ஊர்வலமாக சென்றனர். இந்த ஊர்வலம் காந்தி சிலை முன்பு முடிவடைந்தது.

ஊர்வலத்தில் வழக்கறிஞர் அருள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் சைன்சத்யா, ராஜீவ்காந்தி, என்ஜினீயர் கவுதம், நிதி மற்றும் சமூக ஆர்வலர்கள், சினிமா நடிகர்கள் ரசிகர் மன்றங்களை சேர்ந்தவர்கள் உள்பட ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்