ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக்கோரி காளைகளுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக்கோரி தாராபுரத்தில் காளைகளுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2017-01-13 22:30 GMT
ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் விடப்பட்ட கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு மறுத்து விட்டது. இதனால் தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுகான தடையை நீக்கக்கோரி மாணவர்களும், பொதுமக்களும், மாடுபிடி வீரர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரம் அடைந்து வரும் நிலையில் திருப்பூர் மாவட்டத்திலும் போராட்டம் நடந்து வருகிறது.

தாராபுரம் தேவேந்திரா தெருவை சேர்ந்த பொதுமக்கள் நேற்றுகாலையில் காங்கேயம் இனகாளைகளை அலங்கரித்து ஊர்வலமாக அழைத்து சென்றனர். இந்த ஊர்வலம் தேவேந்திரா தெருவில் இருந்து புறப்பட்டு அனுப்பர்தெரு, புதுமஜீத்தெரு, அண்ணா சிலை வழியாக சென்று பூக்கடை கார்னரை அடைந்தது.

சாலைமறியல்

அங்கு பொதுமக்கள் திடீரென காளைகளுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது “மத்திய, மாநில அரசுகளே, ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கு. பீட்டா அமைப்பை உடனே தடை செய்“ என்கிற கோஷங்களை எழுப்பினார்கள்.

இந்த சாலை மறியல் போராட்டத்தால் பூக்கடை கார்னர் பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து புறப்பட்டு அமராவதி சிலை ரவுண்டானாவிற்கு காளைகளோடு சென்றனர். அங்கும் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் புறவழிச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது பற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பேச்சுவார்த்தைக்கு பிறகு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு காளைகளை அழைத்துக்கொண்டு கலைந்து சென்றனர்.

பேரணி-ஆர்ப்பாட்டம்

காங்கேயத்தில் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க கோரியும், தடைக்கு காரணமான ‘பீட்டா‘ அமைப்பை கண்டித்தும் நேற்று பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது. பல்வேறு அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்ட பேரணி காங்கேயம் திருப்பூர் ரோட்டில் உள்ள வாய்க்கால் மேடு என்ற இடத்தில் இருந்து புறப்பட்டு காங்கேயம் பஸ்நிலையம் வழியாக சீரணி அரங்கை அடைந்தது.

அங்கு நடந்த ஆர்ப்பாட்டத்தில் உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து, முன்னாள் எம்.எல்.ஏ. விடியல் சேகர், தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி, கொங்கு நாடு விவசாயிகள் கட்சி மாநில பொதுச்செயலாளர் கொங்கு ராஜாமணி, சேனாபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மைய நிர்வாக இயக்குனர் கார்த்திகேயன், பொங்கலூர் பி.ஏ.பி. பாசன சபை தலைவர் கோபால், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி மாவட்ட செயலாளர் கங்கா சக்திவேல், நமது கொங்கு நாடு முன்னேற்ற கழக மாநில பொதுச்செயலாளர் எம்.தங்கவேல், காங்கேயம் காளை வளர்ப்போர் சங்க தலைவர் விவேகானந்தன், நாம் தமிழர் கட்சியின் சண்முகம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு பேசினர்.

பல்லடம்

ஜல்லிக்கட்டுக்கு அனுமதிக்கக்கோரி ஆர்ப்பாட்டம் பல்லடம் கொசவம்பாளையம் ரோட்டில் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு இயற்கை விவசாய மீட்பு அமைப்பு தலைவர் பத்மபிரியா, அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ், அ.தி.மு.க., ம.தி.மு.க, காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ், பாரத மாணவர் பேரவை, வனம் இந்திய பவுண்டேசன், பா.ஜனதா தாலுகா வியாபாரிகள் சங்கம், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம், தமிழ்ச்சங்கம், தமிழ்நாடு இயற்கை விவசாய மீட்பு அமைப்பு, நாம் தமிழர் கட்சி, ரோட்டரி சங்கம், திராவிட கழகம், திராவிட மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் அந்தந்த கட்சி நிர்வாகிகள், அமைப்பை சார்ந்தவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள். 

மேலும் செய்திகள்