பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கூடுதல் கட்டணம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கூடுதல் கட்டணம்

Update: 2017-01-13 22:30 GMT

தஞ்சாவூர்,

பொங்கல் பண்டிகை

தீபாவளி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் கடந்த ஆண்டு தீபாவளி, பொங்கல் பண்டிகையின் போது வசூலிக்கப்பட்ட கட்டணத்தையே இப்போதும் வசூலிக்க வேண்டும். அவ்வாறு கூடுதல் கட்டணம் வசூலித்தால் பயணிகளிடம் ஆம்னி பஸ் நிர்வாகம் பஸ்சில் பயணி ஏறும் நேரத்தில் திருப்பி கொடுக்க வேண்டும் என்றும் கோர்ட்டு உத்தரவிட்டது.

அதன்படி தீபாவளி பண்டிகையையொட்டி ஆம்னி பஸ்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது பொங்கல் பண்டிகையை யொட்டியும் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை உத்தரவின் பேரில் வட்டாரபோக்குவரத்து அதிகாரி ராஜ்குமார் தலைமையில் மோட்டார்வாகன ஆய்வாளர்கள் விஜயகுமார், பிரபாகரன், பறக்கும்படை இன்ஸ்பெக்டர் செல்வக்குமார் மற்றும் அதிகாரிகள் தஞ்சை புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம் பகுதிகளில் ஆம்னி பஸ்களில் நேற்று அதிகாலை அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

2 ஆம்னி பஸ்கள் பறிமுதல்

இந்த சோதனையின் போது சென்னையில் இருந்து தஞ்சைக்கு வந்த 2 ஆம்னி பஸ்களில் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தது தெரிய வந்தது. வழக்கமாக சென்னையில் இருந்து தஞ்சை வருவதற்கு கட்டணம் ரூ.660. ஆனால் ஆம்னி பஸ்களில் கூடுதலாக ரூ. 200சேர்த்து ரூ.860 கட்டணம் வசூலித்தது தெரிய வந்தது. இதையடுத்து 2 ஆம்னி பஸ்களையும் பறிமுதல் செய்து வட்டாரப்போக்குவரத்து அலுவலகத்துக்கு எடுத்துச்சென்றனர்.

மேலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கூடுதல் கட்டணம் வசூலிப்பது தெரிய வந்தால் அந்த பஸ்களின் உரிமம் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பொங்கல் பண்டிகை முடிந்த பின்னரும் சில நாட்கள் இந்த சோதனை தொடர்ந்து நடத்தப்படும் என மோட்டார்வாகன ஆய்வாளர் விஜயகுமார் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்