குடிநீர் பிரச்சினையை போக்க நிதி இல்லை என்றதால் ஆய்வு

குடிநீர் பிரச்சினையை போக்க நிதி இல்லை என்றதால் ஆய்வு

Update: 2017-01-13 22:30 GMT

கலசபாக்கம்,

ஆய்வுக் கூட்டம்

துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் 47 பஞ்சாயத்து ஊராட்சி மன்றங்கள் உள்ளன. உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான பதவி காலம் முடிவடைந்த பிறகு 47 பஞ்சாயத்து ஊராட்சிகளின் நிர்வாகத்தை கவனிக்க வட்டார கிராம ஊராட்சி அலுவலர் நூர்பாபு தனி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 47 ஊராட்சி செயலாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் நாகேஷ்குமார் தலைமை தாங்கினார்.

கூட்டம் நடந்து கொண்டு இருந்தபோது ஊராட்சி செயலாளர்கள் தங்கள் கிராம பகுதிகளில் குடிநீர் பிரச்சினை அதிகரித்து உள்ளது. இதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்து தரவேண்டும். மேலும் குடிநீர் குழாய், மின் மோட்டார் பழுது பார்த்தல் உள்பட பல்வேறு பணிகளுக்காக முன்பணம் வைத்து செலவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான நிதியை தர வேண்டும் என்றனர்.

வெளிநடப்பு

இதற்கு தனி அலுவலர் நூர்பாபு, தற்போது நிதி எதுவும் இல்லை. அதனால் பணம் தர முடியாது என்றார். இதனை கண்டித்து ஊராட்சி செயலாளர்கள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். ஆய்வு கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

குடிநீர் பிரச்சினையை தீர்க்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊராட்சி செயலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்