தர்மபுரியில் அரசு பள்ளி வளாகத்தில் இருந்த தேக்கு மரக்கட்டைகள் கடத்த முயற்சி அதிகாரிகள் விசாரணை

தர்மபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பாரத சாரண–சாரணிய இயக்கத்தின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.;

Update: 2017-01-13 22:45 GMT

தர்மபுரி,

தர்மபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பாரத சாரண–சாரணிய இயக்கத்தின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதன் பொறுப்பாளர்களாக இலக்கியம்பட்டி அரசு பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேசன், மாரவாடி அரசு பள்ளி ஆசிரியர் நாகராஜன் ஆகியோர் செயல்பட்டு வருகிறார்கள். இந்த அலுவலக வளாகத்தில் பழமையான தேக்குமரம் ஒன்று இருந்தது. இந்த மரம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முறிந்து விழுந்தது. இந்த மரத்தை துண்டு, துண்டுகளாக வெட்டி பள்ளி அலுவலக வளாகத்தில் பாதுகாப்பாக வைத்திருந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சாரண–சாரணிய இயக்க அலுவலக வளாகத்தை தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் தூய்மை பணிக்காக வந்த சிலர் நேற்று முன்தினம் பள்ளி வளாகத்தில் இருந்த தேக்கு மரக்கட்டைகளை ஒரு வாகனத்தில் ஏற்றி கடத்தி செல்ல முயற்சித்தனர். அப்போது அங்கு சென்ற பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் சங்கர், தேக்கு மரக்கட்டைகளை வாகனத்தில் ஏற்றியவர்களை பிடித்து பள்ளி தலைமை ஆசிரியர் முனுசாமியிடம் ஒப்படைத்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, பாரத சாரண சாரணிய இயக்க பொறுப்பாளர்களிடம் விசாரணை நடத்தி, தேக்கு மரக்கட்டைகள் கடத்தல் முயற்சி குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். இதுதொடர்பாக தர்மபுரி தாசில்தார் சரவணன் மற்றும் வருவாய்துறையினர் சம்பந்தப்பட்ட பள்ளி வளாகத்திற்கு சென்று, தேக்கு மரக்கட்டைகள் கடத்தல் முயற்சி குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்