மந்தாரக்குப்பத்தில் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
மந்தாரக்குப்பத்தில் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மந்தாரக்குப்பம்,
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கோரி அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது மாணவர்கள் அமைப்பினரும் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் போராட்டக்களம் சூடுபிடித்து இருக்கிறது. தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடத்திட அனுமதி வழங்க கோரி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம், பேரணி போன்றவற்றை மாணவர்கள் நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் மந்தாரக்குப்பம் பகுதியில் உள்ள கிராமங்களில் இருந்து பல்வேறு கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் படித்து வரும் மாணவர்கள் நேற்று காலை மந்தாரக்குப்பம் பஸ்நிலையத்தில் ஒன்று திரண்டனர்.
ஆர்ப்பாட்டம்தொடர்ந்து அவர்கள் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கிடவும், அதை நடத்திட அனுமதிக்க வேண்டியும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கலந்து கொண்ட மாணவர்கள் அனைவரும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டை தடை செய்ய கூடாது, இதற்கு கோர்ட்டு அனுமதி அளித்திட வேண்டும். மேலும் உடனடியாக அவசர சட்டம் கொண்டு வந்து ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்க வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் 80–க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.