தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.58 ½ கோடி செலவில் வெள்ளநீர் கால்வாய் அமைக்கப்பட உள்ளது மாவட்ட கலெக்டர் ரவிகுமார் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.58 ½ கோடி செலவில் வெள்ளநீர் கால்வாய் அமைக்கப்பட உள்ளதாக, கலெக்டர் ரவிகுமார் தெரிவித்து உள்ளார்.

Update: 2017-01-13 21:15 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.58 ½ கோடி செலவில் வெள்ளநீர் கால்வாய் அமைக்கப்பட உள்ளதாக, கலெக்டர் ரவிகுமார் தெரிவித்து உள்ளார்.

ஆய்வு கூட்டம்


தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று தாமிரபரணி– கருமேனியாறு– நம்பியாறு இணைப்பு திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ள பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ரவிகுமார் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் அவர் பேசியதாவது:–

நதிகளை இணைக்கும் திட்டம்

தாமிரபரணி ஆற்றின் வெள்ளநீரை கன்னடியான் கால்வாயில் இருந்து வெள்ளக் கால்வாய் மூலம் திசையன்விளை மற்றும் சாத்தான்குளம் ஆகிய வறட்சி பகுதிகளுக்கு திருப்புதல் மற்றும் தாமிரபரணி ஆற்றுடன் கருமேனியாறு மற்றும் நம்பியாறு ஆகிய நதிகளை இணைக்கும் திட்டம் ரூ.872 கோடியே 45 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது.

தாமிரபரணி ஆற்றில் இருந்து கடலில் வீணாக கலக்கும் வெள்ளநீரை கருமேனியாறு மற்றும் நம்பியாறு நதிகளை இணைக்கும் வகையில் புதிதாக வெள்ள நீர்க்கால்வாயை வெள்ளாங்குழி அருகில் உள்ள கன்னடியான கால்வாயின் 6.50 கிலோ மீட்டரில் இருந்து வெட்டி, திசையன்விளை அருகில் உள்ள எம்.எல்.தேரி வரை மொத்தம் 75.175 கிலோ மீட்டர் தூரம் 3 ஆயிரத்து 200 கன அடி நீர் செல்லும் வகையில் வெட்டப்பட உள்ளது.

ரூ.58 ½ கோடி


தாமிரபரணி ஆற்றில் இருந்து கடலில் வீணாக கலக்கும் 13 ஆயிரத்து 758 மில்லியன் கன அடி நீரில் 2 ஆயிரத்து 765 மில்லியன் கன அடி நீரை உபயோகிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.58 கோடியே 45 லட்சம் மதிப்பீட்டில் 12.95 கிலோ மீட்டர் நீளத்தில் வெள்ளநீர் கால்வாய் வெட்டப்பட உள்ளது. இதன் மூலம் 18 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பயன்பெறுவார்கள். 75 குளங்களும், 2 ஆயிரத்து 563 கிணறுகளும் பயன்பெறும். இதன் மூலம் 9 ஆயிரத்து 559 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறும். 1.15 டி.எம்.சி தண்ணீர் கிடைக்கும்.

இந்த திட்டத்திற்காக அரசூர்–1, அரசூர்–2, நடுவக்குறிச்சி, சாத்தான்குளம் உள்ளிட்ட 4 கிராமங்களை சேர்ந்த 179 ஹெக்டேர் புஞ்சை நிலங்கள், 78 ஹெக்டேர் புறம்போக்கு நிலங்கள் என மொத்தம் 257 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டம் 2019–ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது, என்று அவர் பேசினார்.

இந்த ஆய்வு கூட்டத்தில் திருச்செந்தூர் உதவி கலெக்டர் தியாகராஜன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்