சுப்ரீம் கோர்ட்டு தடையால் படுத்து உறங்கும் மாட்டுவண்டி பந்தய மாடுகள்

தூத்துக்குடி அருகே சுப்ரீம் கோர்ட்டு தடை காரணமாக மாட்டு வண்டி பந்தய மாடுகள் படுத்து உறங்கி கொண்டு இருக்கின்றன என்று விவசாயி வேதனை தெரிவித்தார். மாட்டுவண்டி போட்டி தூத்துக்குடி அருகே உள்ள செக்காரக்குடியில் விவசாயிகள் அதிக அளவில் உள்ளனர். இந்த பகுதியில்

Update: 2017-01-13 20:45 GMT

தூத்துக்குடி,

தூத்துக்குடி அருகே சுப்ரீம் கோர்ட்டு தடை காரணமாக மாட்டு வண்டி பந்தய மாடுகள் படுத்து உறங்கி கொண்டு இருக்கின்றன என்று விவசாயி வேதனை தெரிவித்தார்.

மாட்டுவண்டி போட்டி

தூத்துக்குடி அருகே உள்ள செக்காரக்குடியில் விவசாயிகள் அதிக அளவில் உள்ளனர். இந்த பகுதியில் மாட்டு வண்டி போட்டி சிறப்பு வாய்ந்தது ஆகும். விவசாயிகள் போட்டிக்காக தங்கள் காளை மாடுகளை தயார் செய்து உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் மாட்டுப்பொங்கல் அன்று மாட்டு வண்டி போட்டி(ரேக்ளாரேஸ்) நடத்தி உற்சாகமாக கொண்டாடி வந்தனர்.

மாடுகளுக்கு பயிற்சி

ஜல்லிக்கட்டு, மாட்டுவண்டி போட்டிகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்ததோடு செக்காரக்குடியிலும் பந்தய மாடுகள் களையிழந்து விட்டன. இந்த ஆண்டு மாட்டு வண்டி போட்டிக்கு அனுமதி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் செக்காரக்குடி விவசாயிகள் மாடுகளை தயார் செய்தனர். நேற்று பந்தய மாடுகளை வண்டிகளில் மாட்டி பயிற்சியும் பெற்றனர். ஆனால் தடை நீடிப்பதால் போட்டிகளை நடத்த முடியுமா? என்ற கேள்வி எழுந்து உள்ளது. இதைத் தொடர்ந்து பந்தய மாடுகள் படுத்து உறங்கி கொண்டு இருக்கின்றன.

மாடுகள் தயார்

இது குறித்து விவசாயி ஒருவர் கூறும் போது, ‘ஒவ்வொரு ஆண்டும் மாட்டுப் பொங்கல் அன்று மாட்டு வண்டி பந்தயம் நடத்தப்பட்டு வந்தது. கோர்ட்டு தடை காரணமாக கடந்த சில ஆண்டுகளாக நடத்த முடியாமல் உள்ளோம். போட்டியில் பங்கேற்கும் மாடுகளை தினமும் காலையில் குளிர்ந்த நீரில் குளிப்பாட்டுவோம். தொடர்ந்து உளுந்து கரைசல் வழங்கப்படும். அதன்பிறகு உளுந்து, புண்ணாக்கு, பேரீட்சம்பழம் உணவாக கொடுக்கப்படும். தினமும் ஒரு நாட்டுக்கோழி முட்டையும், மாடு ஓடும் போது, கால் வலிமையாக இருப்பதற்காக ஆட்டுக்கால் சூப் வழங்குவோம். விவசாயமும் நடைபெறவில்லை, போட்டியும் நடைபெறவில்லை. இவ்வாறு தயார் படுத்திய பந்தய மாடுகள் கோர்ட்டு உத்தரவால் படுத்து உறங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு எப்படியும் மாட்டு வண்டி போட்டி நடைபெறும் என்று நம்புகிறோம் என்று கூறினார்.

மேலும் செய்திகள்