15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்கக்கல்வி இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம்
15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த மாதம் சென்னையில் தொடக்கக்கல்வி இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம்
சிவகங்கை,
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சிவகங்கை மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் தாமஸ்அமலநாதன் தலைமையில் நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர் புரட்சித்தம்பி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் தீர்மானங்களை முன்மொழிந்து பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் குமரேசன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சிங்கராயர், மாவட்ட துணைத் தலைவர்கள் சூசைராஜ், சண்முகம், மாவட்ட துணைச் செயலாளர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முற்றுகை போராட்டம்‘6–வது ஊதியக்குழுவில் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரிசெய்ய வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். புதிய கல்விக் கொள்கையில் உள்ள குறைகளை சரிசெய்ய வேண்டும்‘ என்பது உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த மாதம்(பிப்ரவரி) 3–ந் தேதி சென்னையில் தொடக்கக்கல்வி இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
8–ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி என்ற முறையை ரத்து செய்துவிட்டு 5–ம் வகுப்பு வரை மட்டுமே கட்டாய தேர்ச்சி என்ற மத்திய அரசின் அறிவிப்பு ஏழை, எளிய குழந்தைகளின் கல்வி வாய்ப்பை தடுப்பதாகவும், நாட்டில் குழந்தை தொழிலாளர்களை உருவாக்குவதாகவும், 14 வயது வரை கல்வி பெறுவது அடிப்படை உரிமை என்ற இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்திற்கு எதிராகவும் அமைந்துள்ளதால் மத்திய அரசு உடனடியாக அந்த அறிவிப்பை திரும்ப பெற வேண்டும், கல்வித் துறையில் மாநிலம் முழுவதும் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், பதவி உயர்வுக்கான 2–ம் கட்ட கலந்தாய்வை நடத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.