ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி சிவகங்கையில் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி சிவகங்கையில் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2017-01-13 23:00 GMT

சிவகங்கை,

தி.மு.க. ஆர்ப்பாட்டம்

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கி, அதை நடத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி சிவகங்கை மாவட்ட தி.மு.க. சார்பில் சிவகங்கை அரண்மனைவாசலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.ஆர்.பெரியகருப்பன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் தென்னவன் முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து கே.ஆர்.பெரியகருப்பன் பேசியதாவது:–

தமிழர்களின் கலாசாரம், வீரம் ஆகியவற்றின் அடையாளமாக திகழும் ஜல்லிக்கட்டை எப்படியாவது மீண்டும் நடத்திட வேண்டும் என்று தி.மு.க. போராடி வருகின்றது. ஜல்லிக்கட்டு நடத்த புதிய சட்டத்தை கொண்டு வரும் இடத்தில் பா.ஜ.க. அரசு உள்ளது. இதை முறையாக செயல்படுத்த வேண்டிய பொறுப்பு அ.தி.மு.க. அரசுக்கு உள்ளது. ஆனால் அவர்கள் இதில் அக்கறை காட்டவில்லை. தற்போது நீதிமன்ற தீர்ப்பு வரும்வரை காத்திருக்க முடியாத நிலை உள்ளது. எனவே, மத்திய அரசு உடனடியாக அவசர சட்டத்தை இயற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கலந்து கொண்டவர்கள்

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர்கள் மணிமுத்து, சேங்கைமாறன், தி.மு.க. இளைஞரணி முன்னாள் துணைஅமைப்பாளர் பள்ளத்தூர் ரவி, ஒன்றிய கழக செயலாளர்கள் முத்துராமலிங்கம், மேப்பல் சக்தி, ஜெயராமன், சுப.மதியரசன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் பவானிகணேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில், சிவகங்கை நகர செயலாளர் துரைஆனந்த் நன்றி கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களில் சிலர் தங்களது காளைகளுடன் மேடையில் ஏறி நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊர்வலம்

ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி காரைக்குடி ரெயில்வே சாலையில் இருந்து கல்லூரி மாணவர்கள், காரைக்குடி மக்கள் மன்றம், தமிழர் முன்னணி இயக்கம் உள்பட பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் ஊர்வலமாக சென்றனர். ஊர்வலம் தேவர் சிலையை சென்றடைந்ததும் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், காரைக்குடி மக்கள் மன்ற தலைவர் ராஜ்குமார், செயலாளர் ஆறுமுகம், இளைஞரணி சார்பில் விக்னேஷ்பிரபு, தேவகோட்டை இமயம் சரவணன், மாறன், ஜல்லிக்கட்டு பேரவை செயலாளர் நாராயணன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். காரைக்குடி ஐந்து விளக்கு பகுதியில் அனைந்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் அதன் மாவட்ட செயலாளர் சிவாஜிகாந்தி தலைமையில் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மானாமதுரையில் இளைஞர்கள், பொதுமக்கள், மாடுபிடி வீரர்கள் ஆகியோர் ஜல்லிகட்டு மீதான தடையை நீக்கக்கோரி ஊர்வலமாக சென்றனர். மானாமதுரை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலம் பழைய பேருந்து நிலையம், மரக்கடை வீதி, அண்ணாசிலை வழியாக தேவர் சிலையை வந்தடைந்தது. ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் பீட்டா அமைப்பை கண்டித்தும், ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி மத்திய அரசை கண்டித்தும் கோ‌ஷமிட்டனர். சமூக வலைதளம் மூலம் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று இந்த ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். ஊர்வலத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் இன்ஸ்பெக்டர் முகமது பரக்கத்துல்லா தலைமையிலான போலீசார் செய்திருந்தனர்.

கருப்பு கொடி ஏந்தி...

சிங்கம்புணரி அருகே உள்ள ஏ.காளாப்பூர் கிராம மக்கள் பலர் கருப்பு சட்டை அணிந்து கருப்பு கொடி ஏந்தி கோவில் காளையுடன் மவுன ஊர்வலம் சென்றனர். ஏ.காளாப்பூர் வடக்கு வாசலி அம்மன் கோவிலில் இருந்து ஊர்வலம் புறப்பட்டு கடைவீதி, சூரக்குடி ரோடு வழியாக சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் சுற்றி வந்து மீண்டும் வடக்கு வாசலி அம்மன் கோவிலை வந்தடைந்தது. இதில், கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்