குடியாத்தத்தில் நகைக்கடை ஊழியரை தாக்கி 1 கிலோ தங்க நகைகள் கொள்ளை

குடியாத்தத்தில் நகைக்கடை ஊழியரை தாக்கி 1 கிலோ தங்க நகைகள் கொள்ளை

Update: 2017-01-13 23:00 GMT

குடியாத்தம்,

நகைக்கடை ஊழியர்

குடியாத்தம் நடுப்பேட்டை காந்திரோடு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 47), குடியாத்தத்தில் உள்ள ஒரு நகைக்கடையில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர் சென்னை சவுகார்பேட்டை பகுதியில் உள்ள மொத்த நகைக்கடைகளில் தயாரிக்கப்படும் நகைகளை குடியாத்தத்தில் உள்ள நகை கடைகளுக்கு கொண்டு வந்து சேர்க்கும் பணியும் செய்து வந்தார். நேற்றுமுன்தினம் காலையில் சீனிவாசன் வழக்கம்போல் சென்னைக்கு குடியாத்தத்தில் இருந்து ரெயில் மூலம் நகைகள் வாங்கிவர சென்றார்.

பின்னர் மொத்த நகைக்கடைகளில் இருந்து குடியாத்தத்தில் உள்ள சில நகை கடைகளுக்கான நகை பார்சலை வாங்கி உள்ளார். இந்த நகை பார்சலில் சுமார் 1 கிலோவுக்கும் அதிகமாக நகைகள் இருந்ததாக கூறப்படுகிறது.

1 கிலோ தங்க நகைகள் கொள்ளை

இந்த நிலையில் நகை பார்சலுடன் சீனிவாசன் சென்னையில் இருந்து பழனி எக்ஸ்பிரஸ் ரெயிலில் குடியாத்தம் ரெயில் நிலையத்திற்கு அதிகாலையில் வந்துள்ளார். பின்னர் அங்கிருந்து குடியாத்தத்திற்கு ஆட்டோவில் வந்து, சைக்கிள் ஸ்டாண்டில் நிறுத்தியிருந்த தனது சைக்கிளை எடுத்துக் கொண்டு நகை பார்சலுடன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது நடுப்பேட்டை வ.உ.சி. தெருவில் சிவசிவ கோவிலை தாண்டி தனியார் வங்கி அருகே சென்றபோது, கார் ஒன்று சைக்கிள் மீது மோதியது. இதில் சைக்கிளுடன் சீனிவாசன் கீழே விழுந்தார். அப்போது காரில் இருந்து இறங்கிய மர்ம நபர் ஒருவர் 1 கிலோ தங்க நகைகள் இருந்த பார்சலை பறித்துக் கொண்டு காரில் ஏறி மின்னல் வேகத்தில் சென்று விட்டார்.

சீனிவாசன் திருடன், திருடன் என கூச்சலிட்டுள்ளார். அப்போது அதிகாலை நேரம் என்பதால் தெருவில் ஆள்நடமாட்டம் எதுவும் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. இதனையடுத்து சீனிவாசன் உடனடியாக நகர போலீஸ் நிலையத்திற்கு நேரில் சென்று தகவல் தெரிவித்தார்.

போலீஸ் விசாரணை

இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவனுக்கு தெரிவிக்கப்பட்டது. அவரது உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் உடனடியாக வாகன சோதனை நடைபெற்றது.

மேலும் இந்த கொள்ளை சம்பவம் குறித்து குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) பிலிப்கென்னடி, இன்ஸ்பெக்டர்கள் மதியரசன், சீனிவாசன், சப்–இன்ஸ்பெக்டர்கள் கிரிஜா, சீனிவாசன், யுவராஜ் உள்ளிட்ட போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் பல்வேறு இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் உள்ள பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேற்றுமுன்தினம் இரவு நகைக்கடை ஊழியர் சீனிவாசன் வந்த பழனி எக்ஸ்பிரஸ் ரெயில் குடியாத்தம் ரெயில் நிலையத்திற்கு இரவு 11–40 மணிக்கு வந்து சேரும். ஆனால் சுமார் 4 மணி நேரம் தாமதமாக நேற்று அதிகாலை 3–30 மணி அளவில் வந்துள்ளது. அதுவரை கொள்ளை கும்பல் சீனிவாசனை கண்காணித்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது.

தொடர் சம்பவங்கள்

குடியாத்தத்தில் தொடர்ந்து நகைக்கடை ஊழியர்களை கண்காணித்து கொள்ளை அடிக்கும் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.

கடந்த 2012–ம் ஆண்டு மே மாதம் நகைக்கடை ஊழியர் ஒருவர் பல லட்சம் ரூபாயை சென்னைக்கு கொண்டு செல்லும்போது கத்திமுனையில் குடியாத்தம் ரெயில்வே மேம்பாலம் அருகே அவரிடம் கொள்ளையடிக்கப்பட்டது. 2013–ம் ஆண்டு நகைக்கடை ஊழியர் பஞ்சாட்சரம் என்பவரை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு, அவரிடமிருந்து இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

இதேபோல் 2015–ம் ஆண்டு காஞ்சீபுரம் மாவட்டம் பாலுசெட்டிசத்திரம் அருகே குடியாத்தம் நகைக்கடை ஊழியர்கள் காரில் பணம் கொண்டு செல்லும்போது, மற்றொரு காரில் வந்த கொள்ளை கும்பல் பணத்தை கொள்ளையடித்து சென்றது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நகைக் கடை ஊழியர் மெய்வண்ணன் என்பவர் குடியாத்தம் அருகே பஸ்சில் வந்தபோது அவரிடம் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்