புயல் நிவாரணம் வழங்கக்கோரி அரசு பஸ் சிறை பிடிப்பு

கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தை சேர்ந்த அயநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்டது ஏனாதிமேல்பாக்கம் கிராமம்.

Update: 2017-01-12 23:57 GMT

கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தை சேர்ந்த அயநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்டது ஏனாதிமேல்பாக்கம் கிராமம். இங்கு கடந்த 2015–ம் ஆண்டுக்கான மழை நிவாரணம் மற்றும் கடந்த மாதம் ஏற்பட்ட வார்தா புயல் பாதிப்பு தொடர்பான நிவாரணம் எதுவும் வழங்கவில்லை என்று புகார் கூறப்படுகிறது. இந்த நிலையில் தங்களுக்கு மழை நிவாரணம் மற்றும் புயல் நிவாரணம் வழங்க வேண்டும் என்று கூறி அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக பொன்னேரி நோக்கி சென்ற அரசு பஸ்சை அவர்கள் சிறை பிடித்தனர்.

தகவலறிந்த கும்மிடிப்பூண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வருவாய் துறை அதிகாரிகளின் கவனத்திற்கு மேற்கண்ட பிரச்சினையை கொண்டு சென்று நடவடிக்கை எடுக்க பரிந்துரைப்பதாக அவர்கள் கூறினர். இதனையடுத்து மறியல் போராட்டத்தை கைவிட்டு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அங்கு 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்