மும்பை அரபிக்கடலில் சத்ரபதி சிவாஜி பிரமாண்ட நினைவு மண்டபத்தை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு

மும்பை அரபிக்கடலில் சத்ரபதி சிவாஜி பிரமாண்ட நினைவு மண்டப திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

Update: 2017-01-12 23:10 GMT

மும்பை

பொதுநல வழக்கு

மும்பை ஐகோர்ட்டில் மோகன் பிடே என்ற கணக்கு தணிக்கையாளர் தாக்கல் செய்த பொதுநல வழக்கில் கூறி இருப்பதாவது:–

சத்ரபதி சிவாஜி மீது நான் மிகுந்த மரியாதையும், கவுரமும் வைத்திருக்கிறேன். இருந்தாலும், கஷ்டப்பட்டு சம்பாதித்து வரிசெலுத்துபவர்களின் பணம் மிகப்பெரிய அளவில் விரயமாவதை நான் எதிர்க்கிறேன். மும்பை அரபிக்கடலின் நடுவே சத்ரபதி சிவாஜிக்கு பிரமாண்ட நினைவு மண்டபம் அமைப்பது அரசியல் கட்சிகளின் அரசியல் ஆதாயத்துக்கு தானே தவிர, வேறு எதுவுமில்லை.

இந்த திட்டத்துக்காக ரூ.3 ஆயிரத்து 600 கோடி நிதி ஒதுக்கி இருக்கின்றனர். அடிக்கல் நாட்டு விழாவுக்கு மட்டும் மாநில அரசு ரூ.77 கோடி செலவழித்து இருக்கிறது. அரசு நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் தருவாயில், இந்த செலவினங்கள் அனைத்தும் நடைபெற்றிருப்பது தேவையில்லாதது. கடந்த ஆண்டு 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களை வறட்சி பாதித்த பகுதியாக அரசு அறிவித்தது.

அடிப்படை வசதி

ஆகையால், இந்த பிரச்சினைகளை தீர்ப்பதில் அரசு முதலில் கவனம் செலுத்தட்டும். இதுபோன்ற பிரமாண்ட நினைவு மண்டபம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்களும் கவலைப்படவில்லை. மாறாக, சிறந்த வாழ்க்கை தரத்தையும், சிறப்பான அடிப்படை வசதிகளையும் தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். இன்றைய நாட்களில் இதற்கு தான் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

எனவே, அரபிக்கடலில் சத்ரபதி சிவாஜி பிரமாண்ட நினைவு மண்டப திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இந்த திட்டம் விலக்கி கொள்ளப்பட வேண்டும்.

கோட்டைகளை பராமரிக்க வேண்டும்

சத்ரபதி சிவாஜிக்கு நினைவு மண்டபம் அமைக்க விரும்பும் அரசியல் கட்சிகள், முதலில் அவர் கட்டிய கோட்டைகளை பேணி பாதுகாத்து, அவருடைய வழிதோன்றல்களை அரவணைக்கட்டும். அவர் கட்டிய பெரும்பாலான கோட்டைகள் இன்றைக்கு பாழடைந்த நிலையிலேயே காணப்படுகின்றன. அதனை பராமரிக்க அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தள்ளிவைப்பு

இந்த வழக்கு தலைமை நீதிபதி மஞ்சுளா செல்லூர் மற்றும் நீதிபதி ஜி.எஸ்.குல்கர்னி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

தலைமை நீதிபதி மஞ்சுளா செல்லூர் கூறும்போது, ‘‘தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அல்லது ஐதராபாத்தின் உசைன் சாகர் ஏரியில் உள்ள சிலையை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?. இதுபோன்ற பிரமாண்ட சிலைகளை அந்த மாநில அரசுகளால் நிறுவ முடியும்போது, பணக்கார மாநிலமாக கருதப்படும் மராட்டியத்தாலும் முடியும்’’ என்றார்.

பின்னர், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

மேலும் செய்திகள்