நாகை துறைமுகத்தை தூர்வாரி ஆழப்படுத்தி, கரைகளை கட்டமைப்பு செய்ய வேண்டும்
நாகை துறைமுகத்தை தூர்வாரி ஆழப்படுத்தி, கரைகளை கட்டமைப்பு செய்ய வேண்டும் என்று சுனாமி மீனவர் மறுவாழ்வு மேம்பாட்டு இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
நாகப்பட்டினம்,
சுனாமி மீனவர் மறுவாழ்வு மேம்பாட்டு இயக்கம் தலைவர் ராஜேந்திரன், முதல்–அமைச்சருக்கு ஒரு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:–
நாகை மாவட்ட தலைநகரில் உள்ள துறைமுகம் கப்பல் தொழில், மீன்பிடி தொழில் செய்துவந்த துறைமுகமாகும். இங்கு கப்பல் தொழில் தடைப்பட்டதாக கூறப்படும் 1983–ம் ஆண்டில் இருந்து துறைமுகம், பாதுகாப்பு பராமரிப்பு ஏதுமின்றி இடிபாடுகளோடு பாழடைந்த நிலையில் உள்ளது. இருப்பினும் மீன்பிடி தொழில் நடைபெற்று வந்தது. வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏற்படும் கடல் சீற்றத்தில் விசைப்படகுகள் இடிபாடுகளில் சிக்கி சிதைந்து போகும் நிலையும் உள்ளது. இதுகுறித்து அரசின் பார்வைக்கு கொண்டு சென்றபின், அப்போதைய மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் நேரில் வருகை தந்து, மீனவ மக்களின் கோரிக்கைகளை கேட்டு, அபாயம் இல்லாத மீன்பிடி தொழிலுக்கு ஏற்ப துறைமுகம் அமைத்திட ரூ.5 கோடி நிதி உதவி செய்து, இடிபாடுகள் அகற்றப்பட்டு கடலின் அலையடி தூரம் வரை இரு கரைகளிலும் கருங்கல் பாறைகள் போட்டு கட்டமைப்பு செய்யப்பட்டது.
தூர்வார வேண்டும்மேலும் 2004–ல் ஏற்பட்ட சுனாமிக்கு பிறகு துறைமுகம் மீட்பு பணி செய்யப்பட்டு சீரமைக்கப்பட்டது. ஆனால் அதைதொடர்ந்து தற்போது துறைமுகத்தின் இருகரை கட்டமைப்புகள் சிதைந்து ஒழுங்கின்றியும், நுழைவாயிலில் மணல் திட்டு ஏற்பட்டு விசைப்படகுகளின் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்படுகிறது. இதனால் புயல் எச்சரிக்கை காலங்களில் விசைப்படகுகள் அவசரமாக துறைமுகத்திற்குள் வரமுடியாத நிலை ஏற்பட்டு, காரைக்கால் தனியார் துறைமுகத்தில் தஞ்சமடைய அனுமதி வேண்டப்படுகிறது. நாகை துறைமுகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள், பைபர் படகுகள் மூலம் மீன்பிடி தொழில் நடைபெறுகிறது. மீன்பிடி தொழிலை காப்பாற்றிட நாகை துறைமுகத்தை தூர்வாரி ஆழப்படுத்தி, இரு கரைகளையும் கட்டமைப்புகள் செய்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். துறைமுகத்தில் கடலின் உட்பகுதிவரை மின்னொளி செய்து அபாயம் இல்லாதவாறு மீன்பிடி தொழில் நடைபெற உதவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.