சிறப்பான சேவைக்காக அதிக விருதுகளை பெற்று கே.எஸ்.ஆர்.டி.சி. லிம்கா சாதனை படைத்துள்ளது மந்திரி ராமலிங்கரெட்டி பேட்டி

சிறப்பான சேவைக்காக அதிக விருதுகளை பெற்று கே.எஸ்.ஆர்.டி.சி. லிம்கா சாதனை படைத்துள்ளதாக மந்திரி ராமலிங்கரெட்டி கூறினார்.

Update: 2017-01-12 22:48 GMT

பெங்களூரு

கர்நாடக மாநில போக்குவரத்துத்துறை மந்திரி ராமலிங்கரெட்டி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

ரூ.115 கோடி வருவாய்

கே.எஸ்.ஆர்.டி.சி. போக்குவரத்து கழகத்தின் வரலாற்றில் முதல் முறையாக 2015–16–ம் ஆண்டில் ரூ.115 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. ஊழியர்கள் ஓய்வு பெறும்போது அவர்களுக்கு பணப்பயன்களை வழங்க வேண்டும் என்பதற்காக இதில் ரூ.64 கோடியை பணிக்கொடை நிதியில் சேர்த்துள்ளோம். கே.எஸ்.ஆர்.டி.சி.க்கு ரூ.314 கோடி கடன் இருந்தது. இதில் ரூ.161 கோடியை திரும்ப செலுத்தியுள்ளோம். இன்னும் ரூ.153 கோடி கடன் நிலுவையில் உள்ளது.

கர்நாடகத்தில் பெரும்பாலான நகரங்களில் நகர போக்குவரத்து வசதியை தொடங்கியுள்ளோம். வேறு எந்த மாநிலங்களிலும் இத்தகைய வசதி இல்லை. 5 ஆயிரத்து 273 புதிய பஸ்களை கொள்முதல் செய்து அதை மாநிலத்தில் உள்ள 4 போக்குவரத்து கழகங்களுக்கும் கொடுத்துள்ளோம். நடப்பு ஆண்டில் புதிதாக 8,000 பஸ்களை வாங்க திட்டமிட்டுள்ளோம். இதில் 2,500 பஸ்கள் கிராமப்புற சேவைக்கு பயன்படுத்தப்படும்.

காண்காணிப்பு கேமராக்கள்

நாட்டிலேயே முதல் முறையாக 100 சதவீதம் உயிரி எரிபொருளில்(பயோடீசல்) இயங்கும் 25 பஸ்களின் சேவையை தொடங்கியுள்ளோம். கடந்த 3 ஆண்டுகளில் புதிதாக 25 ஆயிரத்து 454 ஊழியர்களை நியமனம் செய்துள்ளோம். 110 கவுண்ட்டர்களில் பண அட்டை உரசும் எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ்கள் மற்றும் பஸ் நிலையங்களில் இலவச ‘வை–பை‘ வசதி செய்ய உள்ளோம். ஏற்கனவே முக்கியமான 24 பஸ் நிலையங்களில் ‘வை–பை‘ வசதி உள்ளது.

பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ரூ.15 கோடியில் போக்குவரத்து பணிமனைகள், கோட்ட அலுவலகங்கள் மற்றும் 90 பஸ் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ்கள் சுங்கச்சாவடிகளில் மாதத்திற்கு கட்டணமாக ரூ.6 கோடி வரை செலுத்துகிறது. நாங்கள் மின்னணு முறையில் இந்த சுங்க கட்டணத்தை செலுத்த தீர்மானித்து உள்ளோம். இதன் மூலம் 10 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை தள்ளுபடி கிடைப்பதுடன், போக்குவரத்து நேரம், டீசல் செலவு குறையும்.

தேசிய விருது

கே.எஸ்.ஆர்.டி.சி. தனது பயணிகளுக்கு சிறப்பான சேவை வழங்குவதன் மூலம் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளது. இந்த நிலையில் இந்தியாவின் மிக உயர்ந்த தேசிய மின்னணு ஆளுமை தங்கம் விருதை கே.எஸ்.ஆர்.டி.சி. பெற்றுள்ளது. மின்னணு ஆளுமையை சிறப்பான முறையில் செயல்படுத்துவதற்காக இந்த விருது கிடைத்துள்ளது.

கே.எஸ்.ஆர்.டி.சி. இதுவரை 165 விருதுகளை பெற்றுள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு 2013–ம் ஆண்டில் இருந்து இதுவரை கடந்த 45 மாதங்களில் தேசிய மற்றும் சர்வதேச அளவில் 102 விருதுகள் கிடைத்துள்ளது. இதன் மூலம் கர்நாடக சாலை போக்குவரத்து கழகம் சிறப்பான சேவை புரிந்ததற்காக அதிக விருதுகளை பெற்று லிம்கா சாதனை படைத்துள்ளது. மத்திய அரசு ஜே.என்.என்.யு.ஆர்.எம். திட்டத்தின் கர்நாடகத்திற்கு 487 பஸ்களை ஒதுக்க முடிவு செய்துள்ளது. இதில் 133 பஸ்கள் அடுத்த ஒரு மாதத்திற்குள் சேவையில் சேர்க்கப்படும்.

விரைவு பஸ்கள்

பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் திருப்பதி, கோயம்புத்தூர், சேலம் ஆகிய ஊர்களுக்கு நேரடியாக விரைவு பஸ்களை இயக்க முடிவு செய்துள்ளோம். 83 மேற்பார்வையாளர்கள், 1,116 பிற பிரிவுகளில் ஊழியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள்.

இவ்வாறு ராமலிங்கரெட்டி கூறினார்.

மேலும் செய்திகள்