சங்கொள்ளி ராயண்ணா பிரிகேட் செயல்பாடுகளில் பா.ஜனதாவினர் ஈடுபடக்கூடாது எடியூரப்பா மீண்டும் எச்சரிக்கை

சங்கொள்ளி ராயண்ணா பிரிகேட் அமைப்பின் செயல்பாடுகளில் பா.ஜனதாவினர் ஈடுபடக்கூடாது என்று எடியூரப்பா மீண்டும் எச்சரிக்கை.

Update: 2017-01-12 22:44 GMT

பெங்களூரு,

சங்கொள்ளி ராயண்ணா பிரிகேட்

பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், கர்நாடக மேல்–சபை எதிர்க்கட்சி தலைவருமான ஈசுவரப்பா, சங்கொள்ளி ராயண்ணா பிரிகேட் அமைப்பை தொடங்கி நடத்தி வருகிறார். இதற்கு பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். எக்காரணம் கொண்டும் அந்த அமைப்பில் ஈசுவரப்பாவோ அல்லது பா.ஜனதா நிர்வாகிகளோ இருக்கக்கூடாது என்று எடியூரப்பா மற்றும் கட்சி மேலிட தலைவர்கள் கூறினர்.

இதற்கிடையே பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் மேயர் வெங்கடேசமூர்த்தி பா.ஜனதாவில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவர் அந்த அமைப்பின் மாநில பொதுச் செயலாளராக பணியாற்றி வருகிறார். ஈசுவரப்பாவை எச்சரிக்கும் விதமாக பா.ஜனதா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆயினும் சங்கொள்ளி ராயண்ணா பிரிகேட் அமைப்பை கலைக்க மாட்டோம் என்று ஈசுவரப்பா திட்டவட்டமாக கூறிவிட்டார்.

மேலும் வருகிற 26–ந்தேதி கூடலுசங்கமத்தில் நடக்கும் சங்கொள்ளி ராயண்ணா பிரிகேட் அமைப்பின் மாநாட்டில் நமது அமைப்பின் பலத்தை நிரூபிக்க வேண்டும் என்று ஈசுவரப்பா கூறியுள்ளார். இந்த நிலையில் பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

ஒழுங்கு நடவடிக்கை

பா.ஜனதாவுக்கும், சங்கொள்ளி ராயண்ணா பிரிகேட் அமைப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனவே, அந்த அமைப்பின் செயல்பாடுகளில் பா.ஜனதாவினர் ஈடுபடக்கூடாது என்று எங்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன். கட்சியின் இந்த உத்தரவை மீறி அந்த அமைப்பின் கூட்டங்களில் கலந்துகொள்ளும் கட்சி நிர்வாகிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

எங்கள் கட்சியின் மேலிட தலைவர்கள் எல்லா நடவடிக்கைகளையும் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். அந்த அமைப்பை நடத்தி வரும் பா.ஜனதா நிர்வாகிகள் சிலர் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அவர்கள் உரிய நேரத்தில் சரியான முடிவு எடுப்பார்கள். சங்கொள்ளி ராயண்ணா பிரிகேட் அமைப்பு பற்றி நான் அதிகமாக பேச விரும்பவில்லை. அதனால் அதுபற்றி அடிக்கடி கேள்வி கேட்க வேண்டாம்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

மீண்டும் எச்சரிக்கை

சங்கொள்ளி ராயண்ணா பிரிகேட் அமைப்பின் செயல்பாடுகளில் பா.ஜனதாவினர் யாரும் ஈடுபடக்கூடாது என்று எடியூரப்பா ஏற்கனவே எச்சரிக்கை விடுத்து இருந்தார். இப்போது அவர் மீண்டும் தனது கட்சியினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்