தஞ்சையில் மதுக்கடைக்கு பூட்டு போட முயற்சி இந்து மக்கள் கட்சியினர் 11 பேர் கைது

சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளில் மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கக்கோரி தஞ்சையில் மதுக்கடைக்கு பூட்டு போட முயன்ற இந்து மக்கள் கட்சியினர் 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-01-12 22:27 GMT

தஞ்சாவூர்,

இந்து மக்கள் கட்சியினர் போராட்டம்

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன்சம்பத் ஆணைக்கிணங்க சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளான நேற்று தஞ்சை மாவட்ட இந்து மக்கள் கட்சி சார்பில் தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள மதுக்கடைக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி மாவட்ட தலைவர் குணசேகரன் தலைமையில் மாவட்ட செயலாளர் சுகுமாறன், மாநில இளைஞரணி செயலாளர் கார்த்திக் ஆகியோர் முன்னிலையில் இந்து மக்கள் கட்சியினர் பழைய பஸ் நிலையம் அருகே திரண்டு வந்தனர்.

அப்போது அங்கு இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்கள் அங்கேயே கோ‌ஷங்கள் எழுப்பினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 11 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

விடுமுறை அளிக்க வேண்டும்

போராட்டத்தில் மேற்கு வங்க மாநிலத்தில் இந்துக்களை படுகொலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், மேற்கு வங்க அரசை டிஸ்மிஸ் செய்து ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தக்கோரியும், உயிர் இழந்த இந்து குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரியும், பாதிக்கப்பட்டவர்களின் சொத்துக்களையும், உடைமைகளையும் மீட்கக்கோரியும், ஜல்லிக்கட்டுக்கு விதித்த தடையை நீக்கக்கோரியும், சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள் அன்று அரசு மதுக்கடைகளுக்கு அரசு விடுமுறை அளிக்கக்கோரியும் கோ‌ஷங்கள் எழுப்பினர்.


மேலும் செய்திகள்