கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் மனிதசங்கிலி

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கன்னியாகுமரி கடற்கரையில் மாணவர்கள் மனிதசங்கிலி போராட்டம் நடத்தினர்.

Update: 2017-01-12 23:00 GMT
கன்னியாகுமரி,

ஜல்லிக்கட்டுக்கு தடை


தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு கடந்த 2 ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. இந்த ஆண்டு தை பொங்கலுக்காவது ஜல்லிக்கட்டு நடத்த தடை நீங்குமா? என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு மத்திய அரசு அவசர சட்டத்தை இயற்றி அனுமதி வழங்க கோரி பல்வேறு அமைப்பினர் பல கட்டங்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

மனிதசங்கிலி


இந்தநிலையில், முகநூல் மற்றும் வாட்ஸ் அப் மூலம் இணைந்த நண்பர்கள் சார்பில் நேற்று ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கன்னியாகுமரியில் மனிதசங்கிலி போராட்டம் நடந்தது. போராட்டத்தில் கன்னியாகுமரி, நாகர்கோவில் உள்பட பல்வேறு இடங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

கன்னியாகுமரி கடற்கரையில் மனிதசங்கிலியாக கைகோர்த்து நின்று ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க கோரி கோ‌ஷங்கள் எழுப்பினர். சம்பவ இடத்தில் கன்னியாகுமரி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த போராட்டம் சுமார் 1 மணி நேரம் நீடித்தது. இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்