புதுக்கோட்டை மீனவர்கள் 2 பேர் கைது இலங்கை கடற்படையினர் நடவடிக்கை

இலங்கைக்கு கஞ்சா கடத்தியதாக புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் 2 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

Update: 2017-01-12 23:00 GMT
கோட்டைப்பட்டினம்,

மீன்பிடி தளம்

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதிகளில் விசைப்படகு மீன்பிடி தளங்கள் உள்ளன. இங்கிருந்து தினமும் 750-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர்.

அதேபோல மணமேல்குடி, கட்டுமாவடி, மீமிசல், கிருஷ்ணாஜிபட்டினம், அம்மாபட்டினம், புதுக்குடி உள்பட நாட்டுப்படகு மீன்பிடி தளங்களில் இருந்து சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர்.

2 மீனவர்கள் கைது

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை புதுக்குடி கிராமத்தில் இருந்து நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதில் புதுக்குடியை சேர்ந்த சக்திவேல் (வயது 30), முனியகுமார்(28) ஆகிய 2 பேரும் நாட்டுப்படகு ஒன்றில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

அவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது, அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் அந்த படகை சுற்றி வளைத்து சோதனையிட்டனர். அப்போது அந்த படகில் 50 கிலோ கஞ்சா மூட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையொட்டி சக்திவேல், முனியகுமார் ஆகிய 2 பேரையும் கஞ்சா கடத்தியதாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து இலங்கைக்கு கொண்டு சென்றனர். அவர்கள் சென்ற படகும் பறிமுதல் செய்யப்பட்டது.

பரபரப்பு

பின்னர் அவர்களை இலங்கையில் உள்ள காங்கேசன் ராணுவ முகாமில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கஞ்சா கடத்தியதாக 2 நாட்டுப்படகு மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்