விவசாயியின் உடல் அருகே விவசாயிகள் கழுத்தில் தூக்குக்கயிறு மாட்டி போராட்டம்

லால்குடியில், தற்கொலை செய்து கொண்ட விவசாயியின் உடல் அருகே விவசாயிகள் கழுத்தில் தூக்குக்கயிறு மாட்டியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-01-12 23:00 GMT
லால்குடி,

விவசாயி தற்கொலை

லால்குடியை அடுத்த பல்லபுரம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி பழனிச்சாமி(வயது 60). இவர் தனது நிலத்தில் சாகுபடி செய்த நெல்நாற்று, சோளம், கொத்தமல்லி ஆகியவை தண்ணீர் இன்றி கருகியது கண்டு மனவிரக்தியில் நேற்று முன்தினம் தனது வயலின் அருகே இருந்த மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடைய உடல் நேற்று பிரேத பரிசோதனைக்கு பின்பு உறவினர்களிடம் ஒப் படைக்கப்பட்டது.

அவரது உடலுக்கு தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநில தலைவர் விசுவநாதன், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாகண்ணு, தி.மு.க. ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் தங்கமணி, பாரதீய கிசான் சங்க வீரசேகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ஜெயசீலன், பல்லபுரம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மதிவாணன் உள்ளிட்ட பலரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தூக்குக்கயிறு மாட்டி போராட்டம்

பின்னர் பழனிச்சாமியின் உடலுக்கு அருகே, விவசாயிகள் கழுத்தில் தூக்குக்கயிறு மாட்டியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இது குறித்து தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநில தலைவர் விசுவநாதன் கூறுகையில், தமிழக அரசு விவசாயிகளை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. இது வருங்காலத்தில் அ.தி.மு.க.விற்கு ஒரு பெரிய இழப்பாக அமையும். முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு வருந்தி உயிரிழந்ததாக 166 பேருக்கு லட்சக்கணக்கான ரூபாய் உதவித்தொகை வழங்கும் நிலையில், வறட்சியால் உயிரிழந்த 206 விவசாயிகளை கணக்கில் கொள்ளாமல் 17 பேர் தான் இறந்துள்ளனர் என்று கூறுவது பெரும் வேதனை அளிக்கிறது. வடகிழக்கு பருவமழை பொய்த்ததாலும், காவிரியில் தண்ணீர் இன்றி வறண்டதாலும், உயிரிழந்த விவசாயிகளுக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை இழப்பீடு வழங்க வேண்டும், என்று கூறினார்.

இழப்பீடு வழங்க வேண்டும்

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாகண்ணு கூறுகையில், கடந்த 150 ஆண்டுகள் இல்லாத வறட்சியை தமிழகம் சந்தித்துள்ளது. விவசாயிகளின் வறட்சி மரணத்தை வேறு வகையாக அமைச்சர் பேசுவது மிகுந்த வருத்தத்தை தருகிறது. பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நெல் மற்றும் புஞ்சை சாகுபடிக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம், கரும்புக்கு ரூ.50 ஆயிரம், வாழை பயிரிட்டவருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் மாதம் ரூ.15 ஆயிரம் இழப்பீடு வழங்கவேண்டும். உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், என்று கூறினார்.

மேலும் செய்திகள்