அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

டிசம்பர் மாத ஓய்வூதியத்தை வழங்க கோரி திருச்சியில் அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகத்தை ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

Update: 2017-01-12 23:00 GMT
திருச்சி,

ஓய்வூதியம் நிறுத்தம்

தமிழகத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் சுமார் 60 ஆயிரம் பேர் உள்ளனர். திருச்சி பகுதியில் மட்டும் 4 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்களுக்கான ஓய்வூதியம் ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் வழங்கப்படுவது வழக்கம். ஆனால் கடந்த டிசம்பர் மாதத்திற்குரிய ஓய்வூதிய தொகை ஜனவரி 1-ந்தேதி வழங்கப்படவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கடந்த 6-ந்தேதி திருச்சி மண்டல அரசு போக்குவரத்து கழக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். அப்போது அவர்களுக்கு ஜனவரி 11-ந்தேதிக்குள் ஓய்வூதிய தொகை வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.

முற்றுகை போராட்டம்

ஆனால் 11-ந்தேதி அவர்களது வங்கி கணக்கில் ஓய்வூதிய தொகை வரவு வைக்கப்படவில்லை. இதனை தொடர்ந்து அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற தொழிலாளர் நல சங்கம் மற்றும் பென்சனர்கள் நல சங்கங்களை சேர்ந்தவர்கள் நேற்று காலை 10 மணி அளவில் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு எதிரில் உள்ள மண்டல அரசு போக்குவரத்து கழக அலுவலகத்துக்கு வந்தனர். ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் திரண்டு வருவதை பார்த்த காவலாளிகள் அந்த அலுவலகத்தின் கேட்டை இழுத்து மூடினார்கள்.

இதனை தொடர்ந்து கேட் முன்பாக உட்கார்ந்து ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். அவர்களில் சிலர் தப்படித்து கோஷம் போட்டனர். ஓய்வூதியர் களுக்கு காலம் தாழ்த்தாமல் டிசம்பர் மாத ஓய்வூதியத்தை உடனே வழங்க வேண்டும், ஓய்வூதியத்தை வாங்காமல் போக மாட்டோம் என்று அவர்கள் கோஷம் போட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

7 மணி நேரம் நீடித்தது

அவர்கள் வெயிலில் அமர்ந்து போராட்டம் நடத்தியதால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்னர் மண்டல அலுவலக கேட் திறந்து விடப்பட்டது. அதன் பின்னர் உள்ளே மர நிழலில் அமர்ந்து ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். காலை 10 மணிக்கு தொடங்கிய போராட்டம் மாலை 5 மணி வரை என 7 மணி நேரம் நீடித்தது. அப்போது அரசு போக்குவரத்து கழக மண்டல மேலாளர் மணி போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

டிசம்பர் மாத ஓய்வூதியத்தில் பாதி தொகையை உடனடியாக வங்கி கணக்கில் வரவு வைப்பது, மீதி தொகையை ஒரு வார காலத்திற்குள் வழங்குவது என அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்