விளையாட்டு வீரர்களுக்கான பரிசுத்தொகை உயர்த்தி தரப்படும் அமைச்சர் கமலக்கண்ணன் உறுதி

விளையாட்டு வீரர்களுக்கான பரிசுத்தொகை உயர்த்தி தரப்படும் என்று அமைச்சர் கமலக்கண்ணன் கூறினார்.

Update: 2017-01-12 22:45 GMT
புதுச்சேரி,

பரிசளிப்பு விழா

பள்ளிக்கல்வி இயக்ககத்தின் விளையாட்டு மற்றும் இளைஞர் பணி பிரிவு சார்பில் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் புதுவை உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் நடந்தது. இந்த போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு நேற்று மாலை பரிசளிப்பு விழா நடந்தது.

நிகழ்ச்சிக்கு அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். பள்ளிக்கல்வி இயக்குனர் குமார் வரவேற்றுப் பேசினார்.

விழாவில் அமைச்சர் கமலக் கண்ணன் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

விளையாட்டு மைதானம்

மாணவர்களுக்கு கல்வி எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் உடற்பயிற்சி. புதுவையில் அரசு புறம்போக்கு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. கோவில் நிலங்கள் வீடுகளாக மாறிவிட்டன. இதனால் விளையாடுவதற்கான இடங்கள் குறைந்துவிட்டது.

25 ஆண்டுகளுக்கு முன்பு ஒவ்வொருவரும் பள்ளிக் கூடம்தான் கேட்டனர். அப்போதைய காலகட்டத்தில் பள்ளிக்கூடத்தின் அருகேயே பல தனியார் நிலங்கள் காலியாக இருந்ததால் தனியாக விளையாட்டு மைதானம் தேவை என்பது கட்டாயமாக இல்லை. மாணவர்கள் தனியார் இடங்களிலேயே விளையாட்டு பயிற்சி பெற்றனர்.

ரூ.56 லட்சம்

இப்போதைய காலகட்டத்தில் பட்டபடிப்பு போன்று விளையாட்டும் தேவையான ஒன்றாக உள்ளது. எனவே அதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகி றோம். கடந்த 4 ஆண்டுகளாக விளையாட்டு வீரர்களுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்கள் தரப்படவில்லை. இப்போது நாங்கள் அதில் கவனம் செலுத்தி வருகிறோம்.

விளையாட்டு வீரர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதில் உள்ள பிரச்சினை தொடர்பாக அன்பழகன் எம்.எல்.ஏ. வின் கருத்துகளை கவனத்தில் கொள்வோம். இந்த விளையாட்டு போட்டிகளை நடத்த ரூ.56 லட்சம் செலவிடப்பட்டுள்ளது.

உயர்த்தி தரப்படும்

பழைய முறைப்படியே பயணப்படி, உணவுப்படி போன்றவை தரப்பட்டுள்ளன. அது தற்போதைய விலைவாசிக்கு போதுமானதாக இருக்காது. வருகிற ஆண்டில் இந்த படிகள் உயர்த்தி தரப்படும். அதேபோல் பரிசுத்தொகைகளும் உயர்த்தி வழங்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் கமலக்கண்ணன் பேசினார்.

நிகழ்ச்சியில் உடற்கல்வி துணை இயக்குனர் லெனின்ராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்