அய்யப்ப பூஜை நடந்த போது பக்தர்கள் கூட்டத்துக்குள் கார் புகுந்ததில் இளம்பெண் சாவு 7 பேர் படுகாயம்

பல்லடம் அருகே அய்யப்ப பூஜை நடந்தபோது பக்தர்கள் கூட்டத்துக்குள் கார் புகுந்ததில் இளம் பெண் பரிதாபமாக இறந்தார்.

Update: 2017-01-12 22:30 GMT

பல்லடம்,

கூட்டத்துக்குள் புகுந்த கார்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பனப்பாளையம் அரிஜன காலனியை சேர்ந்த பண்ணாரியின் மகள் சிவரஞ்சினி (வயது 22). இந்தநிலையில் இவருடைய உறவினர் உள்பட இந்த பகுதியை சேர்ந்த சிலர் சபரிமலைக்கு செல்ல மாலை அணிந்து இருந்தனர். அவர்கள் சபரிமலைக்கு செல்வதற்காக பல்லடம்–திருப்பூர் ரோட்டில் உள்ள பிளேக் மாரியம்மன்கோவிலில் அய்யப்ப பூஜையுடன் இருமுடி கட்டும் நிகழ்ச்சி நடந்தது.

இந்த பூஜையில் சிவரஞ்சினி உள்பட சுமார் 50–க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருந்தனர். இரவு 10.30 மணி அளவில் திருப்பூரில் இருந்து பல்லடம் நோக்கி ஒரு கார் வந்தது. அந்த கார் பனப்பாளையம் பிளேக் மாரியம்மன் கோவில் அருகே உள்ள திருப்பதில் வந்த போது, கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அப்போது, அய்யப்ப பூஜைக்காக நின்று கொண்டிருந்த பக்தர்கள் கூட்டத்துக்குள் கார் புகுந்தது.

இளம்பெண் சாவு

இதில் கூட்டத்தில் நின்று கொண்டிருந்த சிவரஞ்சினி மற்றும் அதே பகுதியை சேர்ந்த உத்தமராஜன்(48), ராஜா(35), ரங்கன்(50), சத்யா(22), துர்காதேவி(22), லலிதா (25), லலிதாவின் மகள் வாணிஸ்ரீ(7) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிவரஞ்சினி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

மற்ற 7 பேரும் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கும், திருப்பூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கும் அனுப்பிவைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த பல்லடம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். காரை ஓட்டிவந்த நபர் யார்? என்று தெரியவில்லை. அவரும் இந்த விபத்தில் காயம் அடைந்து ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்செல்லப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்