திண்டுக்கல்லில் குடிநீரை உறிஞ்ச பயன்படுத்திய 10 மின்மோட்டார்கள் பறிமுதல்

திண்டுக்கல்லில் குடிநீரை உறிஞ்ச பயன்படுத்திய 10 மின்மோட்டார்களை, மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2017-01-12 23:00 GMT
திண்டுக்கல்,

திடீர் சோதனை

திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் 2¼ லட்சத்திற்கும் அதிகமாக மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு, ஆத்தூர் காமராஜர் அணை, காவிரி கூட்டு குடிநீர் திட்டம் ஆகியவற்றின் மூலம் குடிநீர் பெறப்பட்டு 15 நாட்களுக்கு ஒருமுறை வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ஒருசிலர் தேவையான அளவு குடிநீரை சேமித்து வைக்கும் வகையில் மின்மோட்டாரை வைத்து உறிஞ்சுகின்றனர்.

இதற்கிடையே மாவட்டம் முழுவதும் வறட்சி நிலவுவதால், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றும், மின்மோட்டார் வைத்து குடிநீரை அளவுக்கு அதிகமாக உறிஞ்சக்கூடாது என்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிப்பு செய்யப்பட்டது. மேலும் திண்டுக்கல் நகரில் குடிநீர் வினியோகம் செய்யப்படும் பகுதியில் திடீர் சோதனை செய்யும்படி கமிஷனர் மனோகர் உத்தரவிட்டார்.

10 மின்மோட்டார்கள் பறிமுதல்

அதன்படி நேற்று பாரதிபுரம் பகுதியில் குடிநீர் சப்ளை செய்யப்பட்டது. அப்போது மாநகராட்சி அதிகாரிகள் திடீர் சோதனை செய்தனர். அப்போது சில வீடுகளில் மின்மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சப்படுவதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து குடிநீரை உறிஞ்ச பயன்படுத்திய 10 மின்மோட்டார்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் மனோகர் கூறுகையில், மின்மோட்டார் வைத்து குடிநீரை உறிஞ்சுவதால் பிற இணைப்புகளில் குடிநீர் மிகவும் குறைவாக வருவதாக மக்கள் புகார் கூறுகின்ற னர். எனவே, திண்டுக்கல் நகரில் இனி தொடர்ச்சியாக குடிநீர் வினியோகம் செய்யப்படும் பகுதிகளில் சோதனை நடத்தப்படும். விதியை மீறி மின்மோட்டாரை பயன்படுத்தி குடிநீர் உறிஞ்சினால் பறிமுதல் செய்யப்பட்டு, இணைப்பு துண்டிக்கப்படும் என்றார்.

மேலும் செய்திகள்