கோவை மாவட்ட போலீஸ் சார்பில் ஆதிவாசி கிராம மக்களுடன் காட்டுப்பொங்கல் விழா

ஆதிவாசி கிராம மக்களுடன் காட்டுப்பொங்கல் விழா நேற்று நடைபெற்றது.

Update: 2017-01-12 23:00 GMT
துடியலூர்,

காட்டுப்பொங்கல் விழா

கோவை மாவட்டம் ஆனைக்கட்டி பகுதியில் மலையோர கிராமங்களில் ஆதிவாசி மக்கள் வசித்து வருகிறார்கள். கோவை மாவட்ட போலீஸ் சார்பில் ஆதிவாசி மக்களின் நலனுக்காக பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பொங்கல் பண்டிகையையொட்டி ஆதிவாசி கிராம மக்களை உற்சாகப்படுத்தும் வகையில் கோவை மாவட்ட போலீஸ் சார்பில் ‘காட்டுப்பொங்கல்‘ விழா நேற்று கொண்டனூர் என்ற கிராமத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கோவை சரக டி.ஐ.ஜி. தீபக், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரம்யா பாரதி, எஸ்.என்.எஸ். கல்லூரி அறங்காவலர் விஜயகுமார், முதல்வர் கருணாகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

போட்டிகள்

பொங்கல் பண்டிகையையொட்டி மாணவ-மாணவிகள், சிறுவர்-சிறுமிகள், இளைஞர்களுக்கு கயிறு இழுத்தல், கபடி, உரியடித்தல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. பேச்சுப்போட்டி, கவிதை போட்டிகளும் நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு போலீஸ் அதிகாரிகள் பரிசு வழங்கி பாராட்டினார்கள்.

விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரம்யா பாரதி பேசும்போது கூறிய தாவது-

ஆதிவாசி மக்களுக்கு சேவை

கோவை மாவட்ட போலீஸ் சார்பில் ஆதிவாசி மக்களுக்காக பல்வேறு சேவைப்பணிகள் நடைபெற்று வருகிறது. பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து அவற்றை தீர்க்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. ஆதிவாசி பெண்களுக்கு தையல் பயிற்சி அளிப்பது, இளைஞர்களுக்கு தொழிற் பயிற்சி அளிப்பது உள்ளிட்ட பணிகளும் நடைபெறுகிறது. ஓட்டுனர் உரிமம் பெற்றுக்கொடுக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வசதி செய்து கொடுப்பதுடன், கல்வியை இடையில் நிறுத்தியவர்களை கண்டறிந்து அவர்கள் தொடர்ந்து கல்வி கற்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது. ஆதிவாசி பெண்களின் நலனுக்காகவும் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. குடிநீர், மின்சார வசதிகள் குறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு புதிய திட்டங்களை செயல்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. ஆதிவாசி மக்களுக்கு தொடர்ந்து உதவுவோம். அவர்களும் போலீசுக்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும்.

இவ்வாறு ரம்யா பாரதி கூறினார்.

சூப்பிரண்டு பொங்கல் வைத்தார்

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 50 பானைகளில் பொங்கல் வைக்கப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரம்யாபாரதி ஆதிவாசி மக்களுடன் சேர்ந்து பொங்கல் வைத்தார். பின்னர் விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் இனிப்பு பொங்கல் வழங்கப்பட்டது. இந்த விழாவில் மதுவிலக்கு சூப்பிரண்டு ஜியாவுல்ஹக், கூடுதல் சூப்பிரண்டு சந்திரமோகன், பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு ரவிசங்கர், துடியலூர் இன்ஸ்பெக்டர் வெற்றி வேந்தன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்