கிறிஸ்தவ ஆலயங்களை சீரமைக்க நிதி உதவி கோரி விண்ணப்பிக்கலாம் கலெக்டர் மலர்விழி தகவல்
கிறிஸ்தவ ஆலயங்களை சீரமைக்க நிதி உதவி கோரி விண்ணப்பிக்கலாம் என்று சிவகங்கை மாவட்ட கலெக்டர் மலர்விழி தெரிவித்துள்ளார்.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மலர்விழி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
தமிழ்நாட்டில் சொந்த கட்டிடங்களில் இயங்கும் கிறிஸ்தவ ஆலயங்களை பழுதுபார்க்கவும், சீரமைக்கவும் நடப்பாண்டில்(2016–2017) நிதி உதவி வழங்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் நிதிஉதவி பெற சம்பந்தப்பட்ட கிறிஸ்தவ ஆலயம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த கட்டிடத்தில் செயல்பட்டிருக்க வேண்டும். ஆலயம் கட்டப்பட்டிருக்கும் இடம் பதிவுத்துறை அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆலயமும் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆலயத்தினை சீரமைக்கும் பணிக்காக வெளிநாட்டில் இருந்து எந்தவித நிதி உதவியும் பெற்றிருக்க கூடாது. அவ்வாறு வெளிநாட்டில் இருந்து நிதி உதவி பெறவில்லை என்பதற்கான சான்றிதழும் அளிக்க வேண்டும். சீரமைப்பு பணிக்காக ஒரு முறை நிதி உதவி அளிக்கப்பட்ட ஆலயத்திற்கு மறுமுறை நிதி உதவி 5 ஆண்டுகளுக்கு பின்னர் தான் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கலாம்நிதி உதவி பெறுவதற்கான விண்ணப்ப படிவத்தை www.bcmbcmw@tn.gov.in என்ற இணையதள முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அனைத்து சான்றிதழ்களுடனும் அனுப்பப்படும் விண்ணப்பங்களை அதிகாரிகள் குழு பரிசீலித்து கிறிஸ்தவ ஆலயங்களை தல ஆய்வு செய்யும்.
அதன்பின்பு கட்டிடத்தின் வரைபடம் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவற்றுடன் சிறுபான்மையினர் நல ஆணையருக்கு நிதி உதவி வேண்டி பரிந்துரை செய்யப்படும். நிதி உதவி 2 தவணைகளாக ஆலயத்தின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்.
எனவே, தங்கள் பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தை சீரமைக்க விரும்புபவர்கள் விண்ணப்ப படிவத்துடன் சான்றிதழ் மற்றும் உரிய ஆவணங்களுடன் சிவகங்கை மாவட்ட கலெக்டருக்கு வருகிற 31–ந் தேதிக்குள் கிடைக்குமாறு விண்ணப்பித்து பயனடையலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.