ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி ரெயில் மறியலுக்கு முயன்ற நாம் தமிழர் கட்சியினர் 38 பேர் கைது கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 38 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-01-12 23:00 GMT

சிவகங்கை,

ரெயில் மறியலுக்கு முயற்சி

பொங்கல் பண்டிகையின் போது தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக நாம் தமிழர் கட்சியினர் காரைக்குடி அருகே உள்ள தேவகோட்டை ரஸ்தா ரெயில் நிலையத்துக்கு நேற்று வந்தனர். பின்னர் கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சாயல்ராம் தலைமையில் 38 பேர் மன்னார்குடி–மானாமதுரை ரெயிலை மறிக்க முயன்றனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காரைக்குடி தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகர்சாமி மற்றும் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது. இதற்கிடையே சிலர் போலீசாரின் தடுப்பையும் மீறி ரெயில் நிலையத்திற்குள் செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். இதனால் ரெயில் நிலையம் பரபரப்பாக இருந்தது. முடிவில், ரெயில் மறியலுக்கு முயன்ற நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 38 பேரை போலீசார் கைது செய்தனர்.

கல்லூரி மாணவர்கள் போராட்டம்

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் நேற்று மதியம் வகுப்புகளை புறக்கணித்து விட்டு கல்லூரி வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோன்று காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூர் செட்டிநாடு அண்ணாமலை பாலிடெக்னிக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் 500–க்கும் மேற்பட்டோர் நேற்று வகுப்புகளை புறக்கணித்து விட்டு கல்லூரி வளாகத்தில் இருந்து வெளியேறினர்.

பின்னர் அவர்கள், கல்லூரியில் இருந்து ஊர்வலமாக காரைக்குடி நோக்கி நடைபயணமாக வந்தனர். இந்த ஊர்வலத்தில் சில மாணவர்கள் ஜல்லிக்கட்டு காளையுடன் கலந்து கொண்டனர். அப்போது அந்த காளைகள் கூட்டத்தை பார்த்து மிரண்டு ஓடியது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. காரைக்குடி தாலுகா அலுவலகம் வரை ஊர்வலமாக சென்ற மாணவர்கள் அங்கு ஊர்வலத்தை முடித்துக்கொண்டனர்.

மேலும் செய்திகள்