வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்ச்சி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு ‘ரெங்கா, கோவிந்தா’ கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம்

ஸ்ரீரங்கம்,
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் நேற்று அதிகாலை திறக்கப்பட்டது. அப்போது பக்தர்கள் ‘ரெங்கா, கோவிந்தா‘ என்ற கோஷத்துடன் பக்தி பரவசத்தோடு சாமி தரிசனம் செய்தார்கள்.
வைகுண்ட ஏகாதசி விழா
108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என போற்றப்படுவதுமான திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி பெருவிழா உலக புகழ் பெற்றதாகும். ஒவ்வொரு மாதமும் ஏகாதசி வந்தாலும் மார்கழி மாதத்தில் நடைபெறும் திருஅத்யயன உற்சவமே வைகுண்ட ஏகாதசியாகும். அதனாலேயே விரதத்தில் சிறந்ததாக வைகுண்ட ஏகாதசி விரதம் கருதப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி தினத்தன்று இரவு முழுவதும் கண்விழித்து, விரதம் இருந்து பெருமாளையும், அவரது திருமார்பில் வீற்றிருக்கும் மகாலட்சுமியையும் தரிசித்தால் நோயற்ற வாழ்வோடு முக்தியும் பெறலாம் என்பது ஐதீகமாகும்.
சொர்க்கவாசல்
நமது நாட்டில் பல்வேறு இடங்களில் உள்ள வைணவ தலங்களில் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்றாலும் ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் விழாவே மிகவும் சிறப்புக்குரியதாகும். இதற்கு காரணம் ஸ்ரீரங்கத்தில் தான் பன்னிரு ஆழ்வார்களில் முதல்வரான நம்மாழ்வாருக்கு பெருமாளே நேரடியாக தனது திருவடியை காட்டி மோட்சம் வழங்கி இருக்கிறார். அதனால் தான் ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழாவில் பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பின்போது பெருமாளுடன் சென்றால் புண்ணியம் பெறலாம். மேலும் நேரடியாக வைகுண்டத்திற்கு செல்லலாம் என நம்பப்படுகிறது.
28-ந்தேதி தொடங்கியது
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவானது பகல்பத்து, ராப்பத்து, இயற்பா என மொத்தம் 21 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுகிறது. இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி விழா கடந்த டிசம்பர் மாதம் 28-ந்தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து உற்சவர் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து தினமும் வெவ்வேறு சிறப்பு அலங்காரங்களில் புறப்பட்டு அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது நம்பெருமாளுக்கு திருமொழி பாசுரங்கள் அரையர் சேவையுடன் பாடப்பட்டன.
நாச்சியார் திருக்கோலம்
பகல் பத்து உற்சவத்தின் 10-ம் நாளான நேற்று முன்தினம் நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு ராப்பத்து உற்சவத்தின் முதல்நாள் நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சி நேற்று அதிகாலை தொடங்கியது. இதையொட்டி நேற்று முன்தினம் இரவில் இருந்தே கொட்டும் பனியையும் பொருட்படுத்தாது கோவிலின் அனைத்து பிரகாரங்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
ஏகாதசி விரதம் இருந்த பக்தர்கள் கண்விழித்து பெருமாளின் திருநாமத்தை உச்சரித்தபடி இருந்தனர். கிராமங்களில் இருந்து வந்திருந்த பக்தர்கள் பெட்டி, பைகளுடன் பிரகாரங்களிலும், கோவில் வளாகத்தில் உள்ள மணல் வெளியிலும் படுத்து இருந்தனர். வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்து இருந்தனர்.
சிம்ம கதியில் புறப்பட்டார் நம்பெருமாள்
இந்த ஆண்டு அதிகாலை 3.45 மணிக்கு நம்பெருமாள் விருச்சிக லக்னத்தில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்படுவார் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ரத்தின கற்களால் ஆன திரு ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு ரத்தின அங்கியில் புறப்பட்டு வரும் கண்கொள்ளா காட்சியை முதலில் காண்பதற்காக சந்தனு மண்டபம், மேலப்படிவாசல், ராஜ மகேந்திரன் சுற்று பகுதிகளில் பக்தர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பல மணி நேரம் நின்று கொண்டிருந்தனர்.
அதிகாலை 3.15 மணி அளவில் நம்பெருமாளை தோளில் சுமக்கும் ஸ்ரீபாதம் தாங்கிகள், அரையர்கள் அணிவகுத்து மூலஸ்தானத்திற்கு சென்றனர். சரியாக 3.45 மணிக்கு ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை அணிந்து சிம்ம கதியில் மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு வெளியே வந்தார். அப்போது நாராயண ஜீயர், ஸ்தலத்தார் வழிபாடு, மரியாதையை தொடர்ந்து அங்கு நின்று கொண்டிருந்த பக்தர்கள் நம்பெருமாளை வணங்கி தரிசனம் செய்தனர்.
சொர்க்கவாசல் திறப்பு
பின்னர் நம்பெருமாள் மேலப்படி வாசல், ராஜமகேந்திரன் சுற்று வழியாக நாழி கேட்டான் வாசலுக்கு வந்தார். இதைத்தொடர்ந்து தங்க கொடிமரம் வழியாக பிரகாரத்தை சுற்றிய நம்பெருமாள் விரஜாநதி மண்டபத்தை அடைந்ததும் பட்டர்கள் வேத விண்ணப்பம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது வேத விற்பன்னர்கள் ரிக், யஜுர், சாம, அதர்வன வேதங்களை படித்தனர். அங்கு ஐதீகபடி பக்தர்களுக்கு தீர்த்தம், பிரசாதம் வழங்கிவிட்டு நம்பெருமாள் பரமபதவாசல் எனும் சொர்க்கவாசல் அருகில் வந்தார். அப்போது மணியக்காரர் உத்தரவு கொடுக்க பரமபதவாசல் கதவு திறக்கப்பட்டது.
சரியாக அதிகாலை 4.50 மணிக்கு சொர்க்கவாசல் கதவு திறக்கப்பட்டது. 5 மணிக்கு சொர்க்கவாசலை நம்பெருமாள் கடந்தார். அவருடன் பக்தர்களும் வெளியே வந்தனர். அப்போது கோவிலின் உள்பிரகாரத்திலும், வெளிப்பகுதியிலும் நின்று கொண்டிருந்த பக்தர்கள் ‘ரெங்கா, ரெங்கா, கோவிந்தா, கோவிந்தா‘ என்ற கோஷங்களை விண்ணதிர எழுப்பினார்கள்.
பக்தர்களுக்கு தரிசனம்
நம்பெருமாள் சொர்க்கவாசலை கடந்ததை தொடர்ந்து முக்கிய பிரமுகர்கள் மற்றும் பக்தர்களும் சொர்க்க வாசல் அருகில் மேற்கூரையில் பொருத்தப்பட்டிருந்த 2 தங்க பல்லிகளை பார்த்தபடியே பரமபதவாசலை கடந்து சென்றார்கள். சொர்க்கவாசலை கடந்த நம்பெருமாள் சந்திரபுஷ்கரணி, பூப்பந்தல் நடைபாதை, திருக்கொட்டகையை அடைந்தார்.
அங்கு இரவு முழுவதும் கண்விழித்து காத்திருந்த பக்தர்கள் ரத்தின அங்கியில் ஜொலித்த நம்பெருமாளை பக்தி பரவசத்துடன் வணங்கினார்கள். அதன் பின்னர் நம்பெருமாள் மணல் வெளியில் பக்தர்களை தேடி வந்து சுற்றி சுற்றி சேவை சாதித்தார். இதனை தொடர்ந்து ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
அமைச்சர்கள்
விழாவில் அமைச்சர்கள் வெல்ல மண்டி நடராஜன், வளர்மதி, திருச்சி மாவட்ட கலெக்டர் கே.எஸ். பழனிசாமி, சென்னை ஐகோர்ட்டு நீதிபதி வேல்முருகன், அறநிலைய துறை கூடுதல் ஆணையர் கவிதா, முன்னாள் மத்திய மந்திரி எஸ்.ஆர் பாலசுப்பிரமணியன் எம்.பி, முன்னாள் அரசு தலைமை கொறடா மனோகரன், தமிழ்நாடு திருக்கோவில்கள் நிர்வாக அதிகாரிகள் சங்க மாநில தலைவர் சம்பத்குமார் மற்றும் அரசு உயர் அதிகாரிகள், நீதிபதிகள், தொழில் அதிபர்கள், வியாபார பிரமுகர்கள் கலந்து கொண்டனர். வைகுண்ட ஏகாதசி விழாவின் ராப்பத்து உற்சவம் வருகிற 18-ந்தேதி வரை தொடர்ந்து நடைபெறுகிறது. அன்று நம்மாழ்வார் மோட்சத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
வைகுண்ட ஏகாதசி பெருவிழாவையொட்டி ஸ்ரீரங்கம் கோவிலின் ராஜகோபுரம், ரங்கா ரங்கா கோபுரம், வடக்கு கோபுரம், வெள்ளை கோபுரம் உள்பட அனைத்து கோபுரங்களும், விமானங்களும் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இதனால் இரவில் கோவில் கோபுரங்கள் மின்னொளியில் ஜொலித்தன. சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் வேணு சீனிவாசன் தலைமையில் அறங்காவலர்கள், இணை ஆணையர் ஜெயராமன் மற்றும் கோவில் பணியாளர்கள் சிறப்பாக செய்து இருந்தனர். மாநகர போலீஸ் கமிஷனர் அருண் தலைமையில்சுமார் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.