மயிலாடும்பாறை அருகே அரசு பள்ளிக்கூடத்துக்கு செல்ல தார்சாலை பொதுமக்கள் கோரிக்கை

மயிலாடும்பாறை அருகே அரசு பள்ளிக்கூடத்துக்கு செல்ல தார்சாலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு மேல்நிலைப்பள்ளி தேனி மாவட்டம் கடமலை–மயிலை ஒன்றியம் மயிலாடும்பாறை அருகே உள்ள வாய்க்கால்பாறை கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்ப

Update: 2017-01-08 22:00 GMT

கடமலைக்குண்டு,

மயிலாடும்பாறை அருகே அரசு பள்ளிக்கூடத்துக்கு செல்ல தார்சாலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசு மேல்நிலைப்பள்ளி

தேனி மாவட்டம் கடமலை–மயிலை ஒன்றியம் மயிலாடும்பாறை அருகே உள்ள வாய்க்கால்பாறை கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. மலைப்பகுதியின் மேல் அமைந்துள்ள இந்த பள்ளியை சுற்றிலும் விவசாய நிலங்கள் அமைந்துள்ளன. வாய்க்கால்பாறை, உப்புத்துரை, ஆட்டுப்பாறை, கருப்பையாபுரம் உள்ளிட்ட ஏராளமான கிராமங்களை சேர்ந்த 300–க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளியில் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளிக்கு பாதை வசதி இருந்தும் தார்சாலை அமைக்கப்படவில்லை. இதனால் இந்த பாதை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. எனவே மாணவர்கள் இந்த பாதை வழியாக நடந்து செல்ல முடியவில்லை. மேலும் மலையில் அமைந்துள்ள பாதையின் இரண்டு புறமும் முந்திரி காடுகள் அமைந்துள்ளன. எனவே மாணவ, மாணவிகள் தனியாக இந்த பாதை வழியாக செல்ல அச்சப்படுகின்றனர்.

தார்சாலை

இதனால் பிரதான பாதை வழியாக செல்லாமல் விவசாய நிலங்களில் அமைந்துள்ள வேறு பாதை வழியாக பள்ளிக்கு செல்கின்றனர். இதனால் பஸ்களில் இருந்து இறங்கும் மாணவர்கள் 30 நிமிடம் நடந்து பள்ளிக்கூடத்துக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் பள்ளிக்கூடத்துக்கு தார்சாலை அமைக்க வேண்டும் என பல வருடங்களாக தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதேபோன்று இந்த பள்ளியை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்கப்படவில்லை. பள்ளிக்கூடம் திறந்த வெளியில் உள்ளது. எனவே விடுமுறை நாட்களில் பள்ளி வளாகத்தில் சமூக விரோத செயல்கள் நடைபெறுகிறது. மேலும் இந்த பள்ளியில் இதுவரை விளையாட்டு ஆசிரியர் நியமனம் செய்யப்படவில்லை.

கோரிக்கை

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வாய்க்கால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு புதிய தார்சாலை அமைக்க வேண்டும். அதேபோல பள்ளிக்கு முழுமையாக சுற்றுசுவர் அமைத்து விளையாட்டு ஆசிரியர், பள்ளி காவலர் நியமனம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்