வெடிகுண்டுகள் வீசி வெட்டிக் கொலை செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் வி.எம்.சி சிவக்குமாரின் உடல் தகனம்

அரிவாளால் வெட்டியும், வெடிகுண்டுகள் வீசியும் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் வி.எம்.சி.சிவக்குமாரின் உடல் தகனம் செய்யப்பட்டது

Update: 2017-01-04 22:45 GMT
காரைக்கால்,

அரிவாளால் வெட்டியும், வெடிகுண்டுகள் வீசியும் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் வி.எம்.சி.சிவக்குமாரின் உடல் தகனம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

முன்னாள் அமைச்சர்

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினத்தை சேர்ந்தவர் வி.எம்.சி.சிவக் குமார் (வயது 65). புதுச்சேரி அரசில் வேளாண்துறை அமைச்சராகவும், சபாநாயகராகவும், காரைக்கால் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்புக்குழு தலைவராகவும், நிரவி-திருபட்டினம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.

கடந்த 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலில் நிரவி-திருபட்டினம் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராக போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதன்பின் விவசாயத்தில் ஈடுபட்டு வந்தார்.

கடந்த 11.1.2013 அன்று திரு-பட்டினத்தை சேர்ந்த பிரபல சாராய வியாபாரியான ராமு படுகொலை செய்யப்பட்டதை யொட்டி தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவர் புகார் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து வி.எம்.சி.சிவக்குமாருக்கு தொடர்ந்து 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருந்தது.

வெட்டிக்கொலை

சிவக்குமார் காரைக்காலை சேர்ந்த நிரவியில் (நிரவி முதல் சாலையில்) சொந்தமாக திருமண மண்டபம் ஒன்று கட்டி வந்தார். அந்த கட்டுமானப் பணிகளை பார்வையிடுவதற்காக சென்ற போது நேற்று முன்தினம் பகல் 12½ மணி யளவில் மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அந்த இடத்தில் குண்டுகளை வீசி விட்டு அந்த கும்பல் அங்கிருந்து மோட்டார் சைக்கிள்களில் ஏறி தப்பிச் சென்றது.

இந்த பயங்கர சம்பவத்தால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்து போலீசார் விரைந்து சென்று சிவக்குமாரின் உடலை கைப்பற்றி காரைக் கால் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்ற னர்.

இந்த பயங்கர கொலை சம்பவம் குறித்து நிரவி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம கும்பல் பற்றிவிசாரித்துவருகின்றனர்.

இறுதி அஞ்சலி

வி.எம்.சி.சிவக்குமாரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நேற்று முன்தினம் மாலை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அங்கிருந்து அவரது உடல், சிவக்குமாரின் சொந்த ஊரான திரு-பட்டினத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டது.

அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசுத்துறை அதிகாரிகள், அரசியல்கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.

இதன்பின் நேற்று மாலை 4.30 மணியளவில் சிவக்குமாரின் உடல் அங்கிருந்து ஊர்வலமாக திரு-பட்டினம் சாணிப்பாறை என்ற இடத்தில் உள்ள சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

அரசு மரியாதையுடன் தகனம்

மாலை 5.15 மணியளவில் அவருக்கு 21 துப்பாக்கி குண்டுகள் முழங்கப்பட்டு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இறுதிச்சடங்குகள் நடத்தப்பட்ட பின் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

முன்னதாக புதுச்சேரி அரசு சார்பில் சமூக நலத்துறை அமைச்சர் எம்.கந்தசாமி, வேளாண்துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன், சட்டப்பேரவை துணை சபாநாயகர் சிவக்கொழுந்து ஆகியோரும், மாநில காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், மாவட்ட தலைவர் ஏ.பாஸ்கரன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி யினரும் சிவக்குமாரின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள்.

தமிழக அமைச்சர்

தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ், கும்பகோணம் கூட்டுறவு சங்கத் தலைவர் ஆசைமணி, புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர் ஜெயமூர்த்தி, நெடுங்காடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரியங்கா, முன்னாள் அமைச்சர் கல்யாண சுந்தரம் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினார்கள்.

புதுச்சேரி மாநில அ.தி.மு.க. செயலாளர் புருஷோத்தமன், முன்னாள் செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ., புதுச்சேரி சட்டமன்ற அ.தி.மு.க. துணைத்தலைவர் கே.ஏ.யு. அசனா, சட்டமன்ற அ.தி.மு.க. கொறடா வையாபுரி மணிகண்டன், காரைக் கால் மாவட்ட செயலாளர் எம்.வி.ஓமலிங்கம், அவைத்தலைவர் எஸ்.பி.கருப்பையா, பொருளாளர் எச்.எம்.ஏ.காதர் உள்ளிட்ட அ.தி.மு.க.வினர் சிவக்குமாரின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள். 

மேலும் செய்திகள்