ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை அமல்படுத்த உள்ளாட்சி தேர்தலை நடத்தி இருக்க வேண்டும் என்ற விதி இல்லை அமைச்சர் நமச்சிவாயம் பேட்டி

புதுச்சேரி, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை அமல்படுத்த உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டு இருக்க வேண்டும் என்ற விதி இல்லை என்று அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார். புதுச்சேரி உள்ளாட்சி துறை அமைச்சர் நமச்சிவாயம் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது

Update: 2016-12-31 22:45 GMT
புதுச்சேரி,

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை அமல்படுத்த உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டு இருக்க வேண்டும் என்ற விதி இல்லை என்று அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.

புதுச்சேரி உள்ளாட்சி துறை அமைச்சர் நமச்சிவாயம் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஸ்மார்ட் சிட்டி திட்டம்

மத்திய அரசின் நகர்புற மேம்பாட்டு அமைச்சகம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 100 நகரங்களை தேர்வு செய்ததாக அறிவித்தது. அதில் புதுச்சேரியும் இடம் பெற்று இருந்தது. கடந்த ஆட்சியின் போது இந்த திட்டத்தை சேதராப்பட்டு பகுதியில் செயல்படுத்த அறிக்கை தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் அதை மத்திய அரசு நிராகரித்தது.

2016-ம் ஆண்டு நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை புதுச்சேரி நகரில் செயல்படுத்த வேண்டும் என்று மத்திய நகர்ப்புற மேம்பாட்டு துறை மந்திரி வெங்கையாநாயுடுவை சந்தித்துப் பேசினோம். அவரும் 2017-ம் ஆண்டில் செயல்படுத்துவதாக உத்தரவாதம் அளித்தார்.

கருத்துகள் கேட்பு

புதிய திட்டத்தை மத்திய அரசு அளிக்கும்முன், பல நடைமுறைகளை செய்ய வேண்டும். முதல்கட்டமாக பொதுமக்கள் கருத்து கேட்டு நடத்த வேண்டும். அதற்காக புதுச்சேரியில் 6 இடங்களில் கருத்து கேட்க முடிவு செய்யப்பட்டு, 5 இடங்களில் கருத்து கேட்பு பெட்டிகள் வைக்கப்பட்டன. இதில் 5 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்தன. மீதி உள்ள ஒரு இடத்தில் கருத்து கேட்கப்பட உள்ளது.

நாளை (திங்கட்கிழமை) முதல் மேலும் 10 இடங்களில் கருத்து கேட்பு பெட்டிகள் வைத்து கருத்துகள் கேட்கப்படும். சமூக வலைதளங்களிலும் கருத்துக்களை தெரிவிக்க லாம். அதற்கான வசதிகள் ஏற்படுத்தப்படும். இந்த திட்டத்தின் மூலம் மக்களுக்கு 24 மணிநேர மின்சாரம், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவது, போக்குவரத்து நெரிசல் இல்லாதது, சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாதது, சுற்றுலாவை மேம்படுத்துவது ஆகியவை ஏற்படுத்தப்படும். இந்த திட்டத்திற்காக மத்திய அரசு ரூ.500 கோடியும், மாநில அரசு ரூ.500 கோடியும் வழங்கும்.

மார்ச் மாதம் இறுதி வடிவம் இந்த திட்டத்தை செயல்படுத்த எஸ்.பி.வி. என்ற பெயரில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு காலாண்டும் ரூ.200 கோடி செலவு செய்யப்படும். இந்த அமைப்பில் அரசு அதிகாரிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மத்திய அரசு பரிந்துரைத்த தன்னார்வலர்கள் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். பொதுமக்களின் கருத்துகளை கேட்டு, திட்டம் தயாரிக்கப்படும்.

இந்த திட்டம் குறித்து பிப்ரவரி மாதம் மக்களிடம் கருத்து கேட்கப்படும். அதன்பின் மார்ச் மாதம் இறுதி வடிவம் அளிக்கப்படும். அதன்பின் மத்திய அரசுக்கு திட்ட அறிக்கை அனுப்பப்படும்.

இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த முதல்-அமைச்சர் தலைமையில் வருகிற 10, 11 ஆகிய தேதிகளில் கருத்தரங்கம் நடத்தப்படும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை அமல்படுத்த உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டு இருக்க வேண்டும் என்ற விதி இல்லை.

இவ்வாறு நமச்சிவாயம் கூறினார்.

பேட்டியின்போது புதுச்சேரி வளர்ச்சி ஆணையர் நரேந்திரகுமார், நகராட்சி ஆணையர் சந்திரசேகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்