உப்பள்ளியில் மளிகைக்கடை ஊழியர்களை தாக்கி கொள்ளை: 4 வாலிபர்கள் சிக்கினர் ரூ.9.22 லட்சம் பறிமுதல்

உப்பள்ளியில் மளிகைக்கடை ஊழியர்களை தாக்கி கொள்ளையடித்த வழக்கில், 4 வாலிபர்களை போலீசார் கைது செய்து உள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.9.22 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கொள்ளை உப்பள்ளி டவுன் கேசுவாப்பூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் அலகுண்டகி பகுதியி

Update: 2016-12-31 21:09 GMT

உப்பள்ளி,

உப்பள்ளியில் மளிகைக்கடை ஊழியர்களை தாக்கி கொள்ளையடித்த வழக்கில், 4 வாலிபர்களை போலீசார் கைது செய்து உள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.9.22 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கொள்ளை

உப்பள்ளி டவுன் கேசுவாப்பூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் அலகுண்டகி பகுதியில் மளிகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். மளிகைக்கடையில் கேசுவாப்பூர் பகுதியை சேர்ந்த பசவராஜ், முனீஸ் ஆகிய 2 பேரும் வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 8–ந் தேதி இரவு கடையில் வியாபாரம் முடிந்த பின் பசவராஜ், முனீசும் ரூ.12 லட்சத்தை எடுத்துக் கொண்டு, ரமேசிடம் கொடுக்க மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தனர்.

அவர்கள் கேசுவாப்பூர் கிளப் ரோட்டில் வந்தபோது, மோட்டார் சைக்கிளை வழிமறித்த மர்மநபர்கள் பசவராஜையும், முனீசையும் தாக்கி அவர்களிடம் இருந்த ரூ.12 லட்சத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

தனிப்படை அமைப்பு

இதுகுறித்து ரமேஷ், கேசுவாப்பூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இந்த கொள்ளையில் தொடர்புடையவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் மர்மநபர்களை தீவிரமாக தேடிவந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கேசுவாப்பூர் கிளப் ரோட்டில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 2 பேர் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் பழைய உப்பள்ளி நேகால் நகரை சேர்ந்த ஆகாஷ்(வயது 22), ஜங்கிலிபேட்டை பகுதியை சேர்ந்த மல்லிகார்ஜூன்(22) என்பதும், இவர்கள் 2 பேரும் சேர்ந்து நண்பர்களின் உதவியுடன் பசவராஜ், முனீசை தாக்கி ரூ.12 லட்சத்தை கொள்ளையடித்து சென்றதும் தெரியவந்தது.

4 பேர் கைது

இதையடுத்து ஆகாசையும், மல்லிகார்ஜூனையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மாரத்தவாடே பகுதியை சேர்ந்த பிரகாஷ் (25), சஞ்சீவ் (24) ஆகியவர்களையும் போலீசார் கைது செய்தனர். கைதானவர்களிடம் இருந்து ரூ.9.22 லட்சம், 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து கேசுவாப்பூர் போலீசார் கைதான 4 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேற்கண்ட தகவலை உப்பள்ளி–தார்வார் மாநகர போலீஸ் கமி‌ஷனர் பாண்டுரங்க ரானே நிருபர்களிடம் தெரிவித்தார்.


மேலும் செய்திகள்