வனப்பகுதியில் பதுங்கியுள்ள மாவோயிஸ்டுகள் 10 பேர் குறித்து தகவல் அளித்தால் பரிசு புலனாய்வு பிரிவு போலீசார் தகவல்

கோழிக்கோடு, வனப்பகுதியில் பதுங்கியுள்ள மாவோயிஸ்டுகள் 10 பேர் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்று தமிழக போலீசார் அறிவித்துள்ளதாக கேரள புலனாய்

Update: 2016-12-31 22:30 GMT
கோழிக்கோடு,

வனப்பகுதியில் பதுங்கியுள்ள மாவோயிஸ்டுகள் 10 பேர் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்று தமிழக போலீசார் அறிவித்துள்ளதாக கேரள புலனாய்வு பிரிவு போலீசார் தெரிவித்தனர்.

மாவோயிஸ்டுகள்

கேரள புலனாய்வு பிரிவு போலீசார் ஒரு செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு, வேலூர் மாவட்டத்தை சேர்ந்த மகாலிங்கம் (வயது 61), சிங்காரக்கோட்டையை சேர்ந்த ஆனந்தகுமார் (32), ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த காளிதாஸ் (46), சேலத்தை சேர்ந்த மணிவாசகம் (53), சந்திரா (51), கலா (50), மராட்டிய மாநிலத்தை சேர்ந்த யோகேஷ்மதன் (41), சென்னை காந்திநகரை சேர்ந்த பத்மா (40), மதுரை பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த ரீனாஜோய்ஸ்மேரி (33), திருவள்ளூரை சேர்ந்த தசரதன் (33) ஆகியோர் மாவோயிஸ்டுகள் என தமிழக போலீசார் அறிவித்துள்ளனர்.

அவர்களை பல ஆண்டுகளாக தமிழக போலீசார் தேடி வருகின்றனர். இந்த நிலையில் இந்த மாவோயிஸ்டுகள் கேரள மாநிலம் கோழிக்கோடு, நிலம்பூர், வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய பகுதிகளில் உள்ள அடர் வனப்பகுதியில் பதுங்கியிருப்பதாக தமிழக போலீசார் தெரிவித்தனர்.

பரிசு

இதையடுத்து தமிழக போலீசாருடன் இணைந்து கேரள புலனாய்வு பிரிவை சேர்ந்த போலீசாரும் கேரள வனப் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினோம். ஆனால் அவர்களை நெருங்குவதற்கு முன்பே தகவல் அறிந்து மாவோயிஸ்டுகள் வேறு இடத்திற்கு தப்பிச்சென்று மக்களோடு மக்களாக கலந்துவிட்டனர். பின்னர் வேறு வனப்பகுதிக்கு சென்று பதுங்குகின்றனர்.

இதனால் அவர் களை பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் மாவோயிஸ்டுகள் 10 பேர் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என்று தமிழக போலீசார் தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். மேலும் அவர்களின் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

மேலும் செய்திகள்