2016 முடிந்து 2017-ம் ஆண்டு பிறந்தது: புத்தாண்டை குதூகலத்துடன் வரவேற்ற கோவை மக்கள்

கோவை, புத்தாண்டு பிறந்ததையொட்டி கோவை மக்கள் உற்சாகத்துடன் புத்தாண்டை குதூகலத்துடன் வரவேற்றனர். புத்தாண்டு கொண்டாட்டம் உலகம் முழுவதும் 2016 முடிந்து 2017-ம் ஆண்டு பிறந்தது. இதையொட்டி கோவையில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் விடுதிகளில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்ட

Update: 2016-12-31 22:30 GMT
கோவை,

புத்தாண்டு பிறந்ததையொட்டி கோவை மக்கள் உற்சாகத்துடன் புத்தாண்டை குதூகலத்துடன் வரவேற்றனர்.

புத்தாண்டு கொண்டாட்டம்

உலகம் முழுவதும் 2016 முடிந்து 2017-ம் ஆண்டு பிறந்தது. இதையொட்டி கோவையில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் விடுதிகளில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் மற்றும் சிறப்பு விருந்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அந்த ஓட்டல்களில் இரவு 10 மணி முதல் 12 மணி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

புத்தாண்டு பிறந்ததை வரவேற்கும் விதத்தில் ஓட்டல்களில் ‘கேக்’ வெட்டி கொண்டாடப்பட்டது. புத்தாண்டை குதூகலத்துடன் வரவேற்ற மக்கள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். சில இடங்களில் இளைஞர்கள் பட்டாசு வெடித்து புத்தாண்டை வரவேற்றனர்.

மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்

புத்தாண்டையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின்பேரில் போலீசார் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். மது அருந்தி விட்டு இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் ஓட்டியவர்களை பிடிப்பதற்காக கோவையில் ஆங்காங்கே போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தினார்கள்.

கோவையில், அவினாசி சாலை, திருச்சி சாலை, ஆர்.எஸ்.புரம், கிராஸ்கட் ரோடு ஆகிய இடங்களில் இரவு முழுவதும் போக்குவரத்து சிக்னல்கள் நிறுத்தப்பட்டு போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினார்கள். கோவை வ.உ.சி. பூங்கா பகுதியில் வாலிபர்கள் அதிகம் பேர் கூடுவார்கள் என்பதால் பூங்காவை சுற்றிலும் போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர். நள்ளிரவு 12 மணியானதும் இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் சென்றவர்கள் ‘ஹேப்பி நியூ இயர்’ என்று கூச்சல் போட்டுக்கொண்டு சாலைகளில் வாகனங்களை வேகமாக ஓட்டிச் சென்று தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

சாலையில் கேக் வெட்டி கொண்டாட்டம்

சில வாலிபர்கள் சாலையில் ‘கேக்’ வைத்து அதை வெட்டி புத்தாண்டை வரவேற்றனர். புத்தாண்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வாகனங்களில் சென்ற மற்றும் நடந்து சென்ற பெண்களிடம் இளைஞர்கள் புத்தாண்டு வாழ்த்து கூறுகிறோம் என்று கூறி வரம்பு மீறி நடந்து கொள்கிறார்களா? என்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

புத்தாண்டையொட்டி வாகனங்களில் வேகமாக செல்பவர்கள் அதன் பாதிப்புகளை உணரும் வகையில் இந்த ஆண்டு புதிய நடைமுறையை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் அமல்படுத்தினார். அதன்படி கோவையின் முக்கிய சாலைகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சாலையோரம் சிறிய சாமியானா பந்தல் போடப்பட்டிருந்தது. அங்கு அவசர தேவைக்காக ஒரு ஆம்புலன்சு நிறுத்தப்பட்டிருந்தது.

போலீசார் அறிவுரை

சாலைகளில் இருசக்கர வாகனங்களில் குடிபோதையிலும், வேகமாகவும் கூச்சல் போட்டுக்கொண்டே சென்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி வாகனங்களில் இருந்து இறக்கினார்கள். அவர்களை சாமியானா பந்தலில் உட்கார வைத்து குடிபோதையில் வாகனம் ஓட்டியவருக்கும், வேகமாக வாகனத்தை செலுத்தியவருக்கும், வாகனங்களில் அதிக வேகத்துடன் சென்றால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பன குறித்து அவர்களுக்கு போலீசாரும், ஆஸ்பத்திரி ஊழியர்களும் அறிவுரை வழங்கினார்கள்.

சில இடங்களில் வாகனங்களில் வேகமாக வந்தவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினார்கள். சாலைகளில் மோட்டார் சைக்கிளில் ஒரே இடத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக நின்றவர்களை போலீசார் விரட்டினார்கள். ஒரே மோட்டார் சைக்கிளில் 2 பேருக்கு மேல் வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி அவர்களை இறக்கி விட்டனர்.

இதே போல புத்தாண்டையொட்டி கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரம்யா பாரதி உத்தரவின்பேரில் புறநகர் பகுதிகளிலும் போலீசார் தீவிர ரோந்து மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்